
மியன்மார், ஓக.03
சுமார் 3000 அடி உயரத்தில் பயணித்த மியன்மார் விமானத்திலிருந்த பயணி ஒருவர், தரையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நடுவானில் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
63 பயணிகளை ஏற்றிச் சென்ற ATR-72 என்ற விமானம் 3,000 அடி உயரத்தில் பயணத்துக் கொண்டிருந்தபோது, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாகவும் சம்பவத்தில் விமானத்தில் இருந்த பயணி ஒருவரின் முகத்தின் வலது பக்கத்தில் காயம் ஏற்பட்டதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் மியன்மாரின் நய்பிடாவிலிருந்து லொய்காவ் நோக்கி பயணித்த 27 வயதுடைய நபர் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். விமானம் லொய்காவில் தரையிறங்கியதும் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இன்ஸ்டாகிராமில் ‘cabin_crew_club’ மூலம் சம்பவம் தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளன.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் தனது இருக்கையில் அமர்ந்து, சாய்ந்தவாறு தமது கழுத்து மற்றும் கன்னத்தின் வலது பக்கத்தில் ஒரு திசுவை வைத்திருப்பதைக் காட்டுகிறது. மற்றொரு படம் தோட்டா துளைத்த விமானத்தின் உடற்பகுதியில் உள்ள துளையையும் காட்டுகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, லொய்காவில் உள்ள மியன்மார் நெஷனல் ஏர்லைன்ஸ் அலுவலகம், அந்நகருக்கான அனைத்து விமானங்களும் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தது.
மியன்மார் கயா மாநிலத்தில் கிளர்ச்சிப் படைகள் விமானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அந்நாட்டு இராணுவ அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. எனினும், கிளர்ச்சிக் குழுக்கள் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தன.
மியன்மாரின் ஆளும் இராணுவக் குழுவின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஜாவ் மின் துன், அரச தொலைக்காட்சியிடம் தெரிவிக்கையில், அரசாங்கத்துடன் போராடும் சிறுபான்மை போராளிகளான Karenni National Progressive கட்சியைச் சேர்ந்தவர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று கூறினார்.
ஆங் சான் சூகியின் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை தூக்கியெறிந்து 2021 இல் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியதில், இருந்து, கயா இராணுவத்திற்கும் உள்ளூர் எதிர்ப்புக் குழுக்களுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், உண்மை நிலைமையை கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.





