
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தாய்க் கட்சியான தமிழ் மக்கள் கூட்டணிக்கு தேர்தல் திணைக்களம் மான் சின்னத்தை வழங்கியுள்ளது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று தமிழ் மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சி எழுந்துள்ளது.எமது பங்காளிக் கட்சிகளும் நாமும் ஒரு கூட்டணியாக இதுவரை காலமும் நிலைத்து நிற்பது எமக்கொரு பலமே. தலைவர்கள் ஆணவத்தை களைந்தால் ஒற்றுமை சாத்தியமாகும்.
எமது கூட்டணித் தலைவர்கள் நடைமுறைக்கேற்றவாறு நடந்து கொள்ளும் பண்பு தெரிந்தவர்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று சிதையத் தொடங்கியுள்ளது.
கூட்டமைப்பின் பலமும் ஒருமைப்பாடும் ஒரு சிலரின் தன்னிச்சையான நடவடிக்கைகள் காரணமாகப் பாதிப்படையத் தொடங்கியது.
நான் வெளியேறியதும் அதனை சகிக்க முடியாமல்தான். அங்கு பிரிவு ஏற்படும்போது இங்கு ஒருமையும் ஒற்றுமையும் ஏற்படுவதே சாலச் சிறந்தது. ஆகவே, எமது தேசியக் கூட்டணி தொடரும் பலமுடன் தொடரும். மானா மீனா என்பது இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.
எமது புரிந்துணர்வின்படி அது மீன். எமது கட்சியின் அண்மைய பதிவின் பின் அது மானாகவும் மாறலாம். தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் வேறு கட்சிகள் சேர்ந்து தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் அவர்களின் கோரிக்கையை பொறுத்து மீன் சின்னத்துக்கு பதில் மான் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தார்.
பிற செய்திகள்





