15 கோடிக்கு கணக்கு காட்ட வேண்டும்: தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்களின் கழுத்தை நெரிக்கும் தொண்டர்கள்

யாழ், ஓக.03

திலீபன் நினைவேந்தலை காரணம் காட்டி புலம்பெயர் நாடுகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வசூலித்ததாக சொல்லப்படும் 15 கோடிக்கு கணக்கு காட்டுமாறு, தமிழ் தேசியமக்கள் முன்னணியின் இடைநிலைத் தலைவர்களும், தொண்டர்களும் குரல் எழுப்புவதாக தகவல் கிடைத்துள்ளது.

முக்கியமாக, திலீபன் நினைவேந்தலை முன்னின்று நடத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு பிரிவினர் இந்தக் கோரிக்கையை எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில் “திலீபனின் நினைவு தினத்தை சிறப்பாக நடத்துவதாகக் கூறி, வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் பணம் வசூலிக்கப்பட்டது. சுவிஸ், பிரான்ஸ், பிரித்தானியா, கனடா உள்ளிட்ட புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் ஈழத் தமிழர்களிடம் இவ்வாறாக சுமார் 15 கோடி இலங்கைப் பணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், இந்தப் பணத்தில் சிறியதொரு தொகையை மட்டுமே திலீபனின் நினைவேந்தலுக்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள் செலவழித்துள்ளனர்.

திலீபன் நினைவேந்தல் தொடர்பான கணக்கறிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய தலைவர்கள் பகிரங்கப்படுத்த வேண்டும் என கடந்த ஒரு வாரமாக நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்களிடம் இருந்து இது தொடர்பாக எமக்கு முறையான பதில் கிடைக்கவில்லை. இது தொடர்பாக விரைவில் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளோம் என்றார்கள் அவர்கள்.

முன்னதாக, திலீபன் நினைவிடத்தில் எழுந்த பிரச்சினையைக் கூட, புலம்பெயர் தமிழர்களின் பணத்தை பங்கிடுவதில் ஏற்பட்ட பிரச்சினை என சில சிங்கள, ஆங்கில ஊடகங்கள் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply