
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை மனித உரிமைகள் மீறல் தொடர்பான தீர்மானம் திருப்திகரமானதாக இல்லை இது தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை மேலும் தூண்டும் என காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஐக்கிய இராச்சியம் தலைமையிலான, அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, மொண்டெனேக்ரோ, வடக்கு மாசிடோனியா, மலாவி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளடங்கிய, இலங்கைக் கான தீர்மானம் எடுக்கும் குழு முன்வைத்த புதிய தீர்மானத்தின் அடிப்படையில் ஐநா மனித உரிமைகள் பேரவை இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள் மீறல் தொடர்பாக எடுத்துள்ள தீர்மானங்கள் திருப்திகரமானதாக இல்லை என இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் வேதனையுடன் பதிலளித்துள்ளனர்.
இது தொடர்பாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட ஏனைய குழுக்களின் குடும்பத்தினர் தெரிவிக்கும்போது,
“பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர் தமிழ் மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை செய்த இலங்கை பாதுகாப்புப் படைகள் மற்றும் அரசியல் தலைமைகளை காப்பாற்றி, பிணையில் எடுக்கும் விதமாக இந்த தீர்மானம் அமைந்துள்ளது குறித்து நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம்”
“குற்றவாளிகளை அவர்கள் செய்த குற்றங்களிற்கு பொறுப்புக் கூற வைப்பதற்குப் பதிலாக, இந்தத் தீர்மானம் அவர்களின் அட்டூழியக் குற்றங்கள் மேல் வெள்ளை சாயம் பூசி மறைக்கிறது.” எனக் கூறி உள்ளனர்.
மேலும் அவர்கள் தெளிவுபடுத்தும் போது, பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போதைய அறிக்கையின்படி,
ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு அழைக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட தீர்ப்பு புறக்கணிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட 9 மூத்த உறுப்பினர்கள் இதே கருத்தை ஆதரித்து, இலங்கை அரசாங்கம் சர்வதேச நீதிமன்றத்தின் முன் அழைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.
இது இலங்கை மக்களாலும், இலங்கை தமிழ் அரசியல் கட்சி தலைவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தீர்மானமாக இருக்க, தற்போதைய புதிய ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் இதனைப் புறக்கணித்து இருப்பது வேதனைக்குரிய விடயம்.
இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனும் இந்தத் தீர்மானத்தினை இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்கள், இலங்கை தமிழ் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் சமூகம் வலுவாக ஏற்றுக்கொண்டு வரவேற்பு வழங்கியிருந்தது.
அவர்களைப் பொறுத்தவரையில் இது மாத்திரமே இலங்கை மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூர அநீதிகளுக்கு சரியான தீர்வை பெற்றுக் கொடுக்கும் ஒரு முடிவாக கருதப்பட்டது.
நமது முந்தைய அனுபவங்களை வைத்து பார்க்கும் போது தற்போதைய இந்த தீர்மானம் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் பாரிய அளவில் ராணுவத்தை குடியமர்த்துவதற்கு துணைபோகும் விதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அவர்கள் கேள்விக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்ற தைரியத்தில் மேலும் தமிழ் மக்களுக்கு எதிராக மோசமான கொடுமைகளை எந்தவித தயக்கமுமின்றி செய்வதற்கு துணிவார்கள்.
ஏற்கனவே ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் தமிழ் பெண்களை கற்பழித்தும், பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளார்ந்த ஆய்வு அறிக்கையின்படி, இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற கடைசி ஆறு மாதங்களில் 70,000 தமிழர்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமல் ஆக்கப்பட்டு உள்ளனர்.
2017ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிக்கை இடப்பட்ட நீதி திட்ட அறிக்கையில், இலங்கை ராணுவத்தினரின் முகாம்களில் பாலியல் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் பெண்கள் தொடர்பான விவர குறிப்புகள் தெளிவாக உள்ளடக்கப்பட்டிருந்தன.
காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களில் சிறுவர்களும் குழந்தைகளும் கூட உள்ளடங்கி உள்ளார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த உறுப்பினர்கள் பலர் முன்வைத்த கருத்துக்களை புறக்கணித்து உள்ளதோடு மாத்திரமன்றி வேதனையும் துன்பமும் அனுபவித்து நியாயம் கேட்டு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மக்களது இத்தனை வருட கால துயரத்தை தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இந்த அறிக்கை, இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நியாயத்தீர்ப்புக்கு அழைக்காமல் விடுவதன் மூலம் புறக்கணித்து இருக்கின்றது என்பது தெரிகிறது என பாதிக்கப்பட்டவர்கள் குழு தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்





