இறக்குமதி செலவீனம் நூற்றுக்கு 25 வீதம் குறைவடைந்துள்ளது: ரஞ்சித்

கொழும்பு,ஒக் 04

நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் ஜுலை மாதம் வரையிலான காலப்பகுதியில் இறக்குமதி செலவீனம் நூற்றுக்கு 25 வீதம் குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையின் காரணமாகவே இறக்குமதி செலவீனம் குறைவடைந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் சிறந்த பெறுபேறுகளை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் ஏற்றுமதி வருமானம் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளதோடு, கடந்த வருடத்தின் ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 90 வீதம் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, கடந்த ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அரசாங்கத்தின் வருமானமாக 1232.4 பில்லியன் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், செலவீனம் 3539 பில்லியன் ரூபாய் செலவீனமாக பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய அரசாங்கத்திற்கு இதுவரையிலான காலப்பகுதியில் 2306.6 பில்லியன் ரூபாய் பாதக மீதியே எஞ்சியுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

Leave a Reply