நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு அமர்வில் பங்கெடுக்க தடைவிதிப்பு!

நீர்கொழும்பு மாநகர சபையின் மாதாந்த அமர்விற்கு தொடர்ச்சியாக இடையூறுகள் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு தெரிவித்து நீர்கொழும்பு மேயர் தயான் லான்சா எதிர்க்கட்சியின் ஏழு மாநகர சபை உறுப்பினர்களை ஒரு மாத காலத்திற்கு சபைக்கு வருவதற்கு தடை உத்தரவு பிறப்பித்தார்.

இன்று 6ஆம் திகதி நடைபெற்ற மாதாந்த அமர்வின் போதே எதிர்கட்சி உறுப்பினர்கள் சபையில் இருந்து ஒரு மாத காலத்திற்கு வெளியேற்றப்பட்டனர்.

நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான காணியை குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் முன்னாள் நீர்கொழும்பு மேயர் அன்டனி ஜயவீர கொண்டு வந்திருந்த பிரேரணைக்கு  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து மாநகர சபைக்கு சொந்தமான காணியை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தனர். 

இதன்போது, ​​மாநகரசபையின் இடைக்கால சட்டவிதிகளின்படி சபையை நடத்துவதற்கு இடையூறு விளைவிக்கும் ஏழு எதிர்க்கட்சி மாநகர சபை உறுப்பினர்களை வெளியேற்றுமாறு மேயர் தயான் லான்சா சபையில் பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.

சபையில் அந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது. 

சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதிலும், எதிர்க்கட்சி  உறுப்பினர்கள் இதுபற்றி எவ்வித அக்கறையும் இன்றி சபையில்  அமர்ந்து இருந்தனர்.

பின்னர் பொலிஸாரை வரவழைத்து நிலைமையை அமைதிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

வெளியேற்ற உத்தரவிடப்பட்ட உறுப்பினர்கள் சபையில் அமர்ந்திருந்த நிலையில், இன்றைய தினம் ஆளும் கட்சியால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டது.

பிற செய்திகள்

Leave a Reply