புல்மோட்டையில் மின் நூலகம் திறந்து வைப்பு!(படங்கள் இணைப்பு)

திருகோணமலை குச்சவெளி பிரதேச சபையின்  தவிசாளர்  ஏ.முபாறக் அவர்களின் பொற்கால சபை ஆட்சியில் குச்சவெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் முதலாவது  இலத்திரனியல் நூலகமாக புல்மோட்டை பொது நூலகம் பிரதேச சபையின்  தவிசாளர் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வானது குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர் திருமதி மாலினி அசோக்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதில் குச்சவெளி பிரதேச சபையின்  சபையின்  உப தவிசாளர் மற்றும்  உறுப்பினர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது தவிசாளர் மற்றும் உறுப்பினர்களால்  இலத்திரனியல் நூலகத்துக்கான நினைவு கல் திரைநீக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக E- Library பெயர்ப்பலகை செயலாளர் திருமதி மாலினி அசோக்குமார் மற்றும் தவிசாளரினால்  திரைநீக்கம் செய்யப்பட்டது.

அத்துடன் அதிதிகள் விழா மேடைக்கு அழைத்து செல்லப்பட்டு உரிய இறை வணக்கத்துடன் நிகழ்வுகள் இனிதே ஆரம்பமாகியது.

தொடர்ந்து வரவேற்பு தலைமையுரை ஆற்றிய சபையின் செயலாளர் அனைவரையும் வரவேற்று உரையாற்றியதுடன் இந்த நூலக மாற்றத்துக்கு முயற்சித்து வெற்றியாக்கிய தவிசாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறியதுடன் இதனால் இப்பகுதி மாணவர் உள்ளிட்ட வாசகர்கள் அடைய இருக்கும் நன்மைகள் பற்றி தெளிவாகவும் சிறப்பாகவும் உரையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து குச்சவெளி பிரதேச சபைக்கான இணையதளம் www.Kuchchavelips.lk  தவிசாளரினால் மக்கள் பயன்பாட்டிற்காக  ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்த கே.ரமேஸ் தவிசாளரால் நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.

மேலும்  E- library பற்றி சிறப்பான கண்ணோட்டத்தை வழங்கியதுடன் இந்நூலகத்தின் நன்மைகளை பற்றி விரிவாக எடுத்துரைத்த  கிழக்கு பல்கலைக்கழக (நூலக) வளவாளர் என்.எம்.ரவிக்குமார் தவிசாளரினால் பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது. 

இந் நிகழ்வில் ஆரம்பபிரிவு மாணவிகளினால்  வரவேற்பு நடனம் மற்றும் ஹசீதா நடனம் என்பன சிறப்பாக இடம்பெற்று அனைவரினதும் கவனத்தை ஈர்த்ததுடன் அவர்களுக்கான பரிசில்கள் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களான ஜெ.நிமலகாசன் மற்றும் ஜனாப் எம்.ஐ.எம்.சலீம் ஆகியோரால் முறையே வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இன்றைய நிகழ்வின் முக்கியமாக புல்மோட்டை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை), அறபாத்நகர் பாடசாலை, ஜின்னாபுர பாடசாலை மாணவர்களுக்கு  புல்மோட்டை  E- library அங்கத்துவ அட்டைகள் தவிசாளரின் சொந்த நிதியில் இருந்து தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், அதிதிகள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்களால் வழங்கி வைக்கப்பட்டதுடன் பிரதேச சபையின் கௌரவ உப தவிசாளர் ஜனாப் எஸ்.எம்.சாஜித் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பாக விசேட உரையாற்றினார்.

அத்துடன் சிறப்புரைகள்  குச்சவெளி பிரதேச செயலகத்தின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப் பீ.எம்.நாஸீம் மற்றும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு எஸ்.முரளிதரன் ஆகியோரால் ஆற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து  தவிசாளர் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள், அதிதிகளால் புல்மோட்டை தையல் பயிற்சி நெறியினை நிறைவுசெய்த மாணவிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட குச்சவெளி பிரதேச சபையின்  தவிசாளர்  ஏ.முபாறக் அவர்களின்  உரையில் இந்நூலகத்தின் நன்மைகள் மற்றும் இலத்திரனியல் நூலகமாக மாற்றிய விடயங்கள் தொடர்பாக விரிவாக உரையாற்றியதுடன் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பே இந்த வெற்றிகரமான நிகழ்வு எனவும் இதன் மூலம் இப்பிரதேசம் அடையும் நன்மைகள் மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply