கடந்த மூன்று நாட்களில் 35 எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் எரிவாயு கசிவு காரணமாக கடந்த மூன்று நாட்களில் மட்டும் 35 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா, புத்தளம் உள்ளடங்களாக பல்வேறு இடங்களில் சமையல் எரிவாயு வெடித்து சிதறிய சம்பவங்கள் தினமும் பதிவாக்கிக் கொண்டுள்ளன.
அத்துடன் மஹர, கடவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு கசிவு காரணமாக மற்றுமொரு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனினும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
இதேவேளை, லிட்ரோ எரிவாயு நிறுவனம், சமையல் எரிவாயு அடுப்பை கையாளும் விதம் குறித்து தெளிவுபடுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தது.
கந்தளாய் அக்போபுர பகுதியில் கேஸ் அடுப்பு வெடிப்பு சம்பவம்
திருகோணமலை- கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கேஷ் அடுப்பு வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அக்போபுர யூனிட் 19 ஆவது குலனி பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை .
மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்மாந்துறையில் சம்பவம்
தேநீர் தயாரிக்க பயன்படுத்திய எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் பதிவாகியுள்ளது.
இன்று (2) காலை அம்பாறை – சம்மாந்துறை- வளத்தாப்பிட்டி 1 பகுதியில் குறித்த எரிவாயு அடுப்பு வெடிப்புக்குள்ளாகியுள்ளதுடன் இச்சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை.
வழமை போன்று தேநீர் தயாரிப்பதற்காக எரிவாயு அடுப்பினை இயக்கிய போது குறித்தவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ நேரத்தில் குறித்த எரிவாயு அடுப்பினை இயக்கி விட்டு வெளியில் சென்ற வேளை இவ்வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டனர்.
சம்மாந்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தளம் நகரிலும் வெடிப்புச் சம்பவம்
புத்தளம் மேஹர் வீதியில் அமைந்துள்ள வீட்டில் எரிவாயு கசிவு காரணமாக சமையலடுப்பு வெடித்துள்ளது.
இதன்போது எவருக்கும் காயமேற்படவில்லையென தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றதாக வீட்டார் தெரிவித்தனர்.
புத்தளம் பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகத் தந்தனர்.
புத்தளம் நகரில் இதுவே முதலாவது வெடிப்புச் சம்பவமென பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.






