அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை நிறைவேற்றிற்கொள்வதற்காக கிடைக்கப்பெற்ற வாக்குகளை வைத்துப் பார்க்கும்போது ஆளுங்கட்சிக்குள் பாரிய பிளவுகள் ஏற்பட்டு இருப்பதை அறிந்துக்கொள்ளக்கூடியதாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
சுதந்திர மக்கள் காங்கிரஸ் கொழும்பில் நேற்றையதினம் (22) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 22ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே ஆளுங்கட்சியை சேர்ந்த சிலர் செயற்பட்டனர்.
ஆளுங்கட்சியிலிருந்து பிரிந்து சென்று சுயாதீனமாக செயற்படும் தரப்பினர், எதிர்க் கட்சிகள் அளித்த வாக்குகளினாலேயே 22ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இரட்டை பிரஜா உரிமை நீக்கப்பட்டமையானது பல அரசியல்வாதிகளுக்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இதன் காரணமாகவே 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிப்பதற்கு ஆளுங்கட்சியை சேர்ந்த பலர் பின்வாங்கினர்.
எனவே பசில் ராஜபக்ஷ தலைமை தாங்கும் அல்லது வழிநடத்தும் பொதுஜன பெரமுனவில் அவருக்கு ஆதரவாக 25 அல்லது 26 பேரே இருப்பது தெளிவாகியுள்ளது.
அவர்களே நேற்றுமுன்தினம்(21) அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்கவில்லை.
எதிர்க் கட்சி என்று பார்த்தாலும்கூட 22ஆவது திருத்தம் திருப்பதியளிக்கும் வகையிலான திருத்தம் இல்லை என்பதை நாம் அறிவோம்.
போராட்டக்காரர்கள் எதிர்ப்பார்த்தளவிலான திருத்தமாக 22ஆவது திருத்தம் அமையவில்லை என்பதும் எமக்கு தெரியும்.
எனினும் 20ஆவது திருத்தத்துக்கு மேலாக 22ஆவது திருத்தம் சிறந்தது என்பதை உறுதிபடக் கூற முடியும்.
22ஆம் திருத்தத்திலிருந்து கொண்டே புதிய அரசியலமைப்பு உருவாக்கம்வரை பயணிக்க முடியும் என்றும் நாம் உறுதிபட கூற முடியும் என தெரிவித்தார்.
பிற செய்திகள்

