கோவை கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு தொடர்பு!

தமிழகம் கோவையில் ஞாயிறு அதிகாலை இடம்பெற்ற கார் வெடிப்புத் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து முக்கிய சந்தேகநபர்களான முஸ்லிம்களில் இருவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தீவிர விசாரணை நடத்தி வரும் இந்தியப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வெடிப்பில் உயிரிழந்தவரின் வீட்டில் இருந்து 75 கிலோ வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டது.  அதில் சுமார் 55 கிலோ அமோனியம் நைதிரேட்டும் அடங்கும் எனவும் கூறப்பட்டது. 

தமிழகம் கோவையில் கடந்த ஞாயிறு (23 ஆம் திகதி) அதிகாலை 4 மணியளவில் முக்கிய இந்து ஆலயம் அருகில் ஒரு கார் ஒன்று திடீரென வெடித்துப் பிளந்தது. இதன்போது காரில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். அது காரில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்தது, அது தற்செயலான விபத்து என காலையில் கூறப்பட்டது. எனினும் சந்தேகம் கொண்ட தமிழகப் பொலிஸார் டில்லி வரை அவசர தகவல் வழங்கினர். 

இதனையடுத்து இந்திய தேசிய புலனாய்வுத் துறையினர் நேரடியாக இறங்கித் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். உயிரிழந்தவருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த ஐவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட ஐவரில் இருவர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. 

அப்துல் காதர் ஜமேஷா முபீன் (வயது 29) என்பவரே காரில் உயிரிழந்தவராவார்.

முகமது தல்ஹா (வயது 25), முகமது அஸாருதீன் (வயது 23) ஆகியோர் உக்கடத்திலும், முகமது ரியாஸ் (வயது 27), பெரோஸ் இஸ்மாயில் (வயது 27), முகமது நவாஸ் இஸ்மாயில் (வயது 26) ஆகிய மூவரும் ஜி.எம். நகரிலும் வைத்துக் கைது செய்யப்பட்டனர் என்று கூறப்பட்டது.

மறுநாள் 24ஆம் திகதி இந்துக்களின் தீபத் திருநாள் பண்டிகையை இலக்கு வைத்து கொண்டு வரப்பட்ட குண்டே தொழில் நுட்பக் கோளாறு காரணமாக முற்கூட்டியே வெடித்ததா என்ற திசையிலும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாக கோவை பொலிஸ் கொமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளவை வருமாறு:-

கோவையில் கார் சிலிண்டர் வெடித்தது தொடர்பாக தடயவியல் துறை, கைரேகை துறையினரை வரவழைத்து அறிவியல் பூர்வ புலன் விசாரணை நடத்தப்பட்டது. இறந்த நபரை 12 மணி நேரத்தில் அடையாளம் கண்டுபிடித்தோம்.

வாகனம் 10 நபர்களை தாண்டி கைமாறி வந்த நிலையிலும் விரைவாக உரிமையாளர் கண்டுபிடிக்கப்பட்டார். இறந்து போன நபரைக் கண்டுபிடித்து  அவரின் வீட்டில், நீதிமன்றம் அனுமதி பெற்று சோதனை நடத்தப்பட்டது. அதில் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம்.

சம்பவம் தொடர்பாக உதவிக் கொமிஷனர் வீரபாண்டி தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. 9 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் ஒன்பது தனிப்படைகள் களத்தில் விசாரிக்கின்றன.

இதுவரை 22 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். புலன் விசாரணை அடிப்படையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சம்பவ இடம் அருகே பொலிஸ் செக்போஸ்ட் இருந்ததால், அந்த வாகனம் மேற்கொண்டு செல்லாமல் அங்கேயே வெடித்திருக்கக்கூடும் என்ற தகவல் கிடைத்துள்ளது.

இந்த சம்பவம் நடந்த உடன், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கூட்டுச்சதியில் வேறு யார் சம்பந்தப்பட்டு உள்ளனர், யார், யாருடன் தொடர்பு உள்ளது என்பது குறித்து புலன் விசாரணை நடந்து வருகிறது.

கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேரில் மூன்று பேர் ஜமேஷா முபின் வீட்டில் இருந்து வெடிப்பொருட்களை வெளியே எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சியில் இருந்த நபர்கள். ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 2 எல்.பி.ஜி. சிலிண்டர்கள், 3 டிரம்களை எடுத்து சென்றனர். அதில் என்னென்ன பொருள்கள் இருந்தன என்பது குறித்து தடயவியல் சோதனைக்கு அனுப்பி உள்ளோம். முபின் வீட்டில் இருந்து கைதானவர்களில் ரியாஸ், நவாஸ், பெரோஸ் ஆகியோர் வெடிக்கக்கூடிய பொருள்களை தெரிந்தே எடுத்து சென்றனர்.

ஒருவர் ஒருங்கிணைத்துள்ளார். மற்றொருவர் வாகனம் ஏற்பாடு செய்துள்ளார். முபின் வீட்டில் நடந்த சோதனையில் பொட்டாஷியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர் என 75 கிலோ வெடிப்பொருள்கள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேரில் ஒருவரான முகமது தல்ஹா என்பவர், கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட அல் உம்மா தலைவர் பாஷாவின் உறவினர். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே 2019 தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள். சிலர் கேரளாவிற்கு சென்று வந்துள்ளனர். அவர்கள் எதற்காக, எப்போது சென்றவர்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. முழு விவரம் கிடைத்த உடன் தகவல் தெரிவிக்கப்படும். சம்பவ இடத்திலும் சுற்றுவட்டாரத்திலும் இருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. – இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply