
நாட்டில் தற்போது தரமற்ற கோதுமை மா இறக்குமதி செய்யப்படுகிறது.
இதுதொடர்பில் கோதுமை மா களஞ்சியசாலைகளில் துரித பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பில் தர நிர்ணயசபை அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சிற்றுண்டி உரிமையாளர் சங்க தலைவர் அசேல சம்பத் மேலும் தெரிவித்ததாவது:
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா மனித பாவனைக்கு உகந்தல்ல. அவற்றில் சிறிய வண்டுகள் மற்றும் புழுக்கள் காணப்படுகின்றன. இவை விலங்களுக்கு வழங்குவதற்கு பொறுத்தமானதாகவே காணப்படுகிறது.
தர நிர்ணய சபைக்கு சுமார் 100 பொருள்களின் தரத்தை பரிசோதிப்பதற்கான அதிகாரம் மாத்திரமே காணப்படுகிறது.அரிசி மற்றும் மா தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள அதிகாரம் கிடையாது.
ஆனால் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையால் சுமார் ஆயிரக்கணக்கான பொருள்களின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் தரத்தை பரிசோதிக்கும் அதிகாரம் இலங்கை தர நிர்ணய சபைக்கு வழங்கப்பட வேண்டும்.
தரமற்ற கோதுமை மாவை இறக்குமதி செய்து மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை ப்ரீமா நிறுவனம் மற்றும் தர நிர்ணய சபை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளவுள்ளோம்– என்றார்.