போதைவஸ்து திட்டமிட்டு பரப்புதலுக்கு எதிராக வலி.மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானம்!

வடக்கில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் திட்டமிட்ட போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்கு அனைத்து தரப்புடனும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் சபையும் தனது பங்களிப்பை ஆற்றவேண்டும் எனவும்  வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் ஏகமனதாக இன்றைய தினம் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் வலிமேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நடனேந்திரன் தலைமையில் சபையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்பொழுது சபையின் உறுப்பினர் பொன்ராசா பின்வருமாறு பிரேரணை ஒன்றை முன் வைத்தார்.

மாதகல்  போன்ற கடற்கரை பகுதிகளின் ஊடாகத்தான் போதைப்பொருள் அதிகமாக வருகை தருகின்றது என பெரும்பாலும் சுட்டிக் காட்டுகின்றார்கள். யாழ் மாவட்டம் இன்று போதைக்கு அடிமையாகி காணப்படுகின்றது.

நான் நினைக்கின்றேன் ஆரம்ப காலத்தில் குறிப்பாக இந்த யுத்தம் முடிவடைந்த காலப்பகுதியிலே தொடங்கி திட்டமிட்டு பரப்பப்பட்ட ஒன்றாகவ இதனை நாங்கள் பார்க்க வேண்டும். அண்மையில் கூட வடமராட்சியில் இரண்டு இளைஞர்கள் இறந்துள்ளார்கள்.

அவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு உட்பட்டே இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 
இந்த போதைப் பொருள் பாவனை தொடர்பான செயற்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு எம்மிடம் வலுவான கட்டமைப்பு ஒன்று இல்லை .

பொலிசார் சரி கடற்படை சரி எந்த நேரமும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
 கடற்படை எந்த நேரமும் கடற்கரை கடற்பரப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அப்படி இருக்கின்ற பொழுது அவ்வாறு இந்த போதைப் பொருட்கள் எமது பகுதிக்கு வந்து சேர்கின்றது. ஆகவே கடலோர பாதுகாப்பு கண்காணிப்புகள் என்பது சந்தேகத்தை எமக்கு ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்பு தரப்பு அசண்டையீனமாக செயற்படுகின்றதா? என்ற கேள்வியும் எம்மிடம் காணப்படுகின்றது .

குறிப்பாக எமது ஆளுகைக்குட்பட்டக்  பொலிஸ் நிலையங்களாக இருக்கக்கூடிய இளவாலை , வட்டுக்கோட்டை ,மானிப்பாய் பொலிஸ் நிலையமாக இருக்கலாம் ஒரு கூட்டிணைந்த போதைப்பொருளக்கு எதிரான நோக்குடன் செயற்பட வேண்டும். 

அதேபோல கடற்கரையோரமாக பாதுகாப்பில் ஈடுபடக்கூடிய கடற்படையினருக்கு நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோமே ஒழிய அவர்கள் எவ்வித செயற்பாடுகளையும் செய்ததாக இல்லை. குறிப்பாக இளைஞர்களின் செயற்பாடு,எதிர்காலம்  பாதிப்பாக உள்ளது. 

பார்த்தோமானால் கல்வி பொதுதராதர சாதாரண பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள் கஞ்சாவுடன் வெளியில் நிற்கின்றார்கள. பாடசாலை மாணவர்களினுடைய புத்தகப் பைகளிற்குள்  போதைப் பொருட்கள் மீட்கப்படுகின்றன.

இது எப்படி வருகின்றது என்பது எமக்கு தெரியாது. ஆனால் திட்டமிட்டு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆகவே இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு நான் ஒரு தீர்மானத்தை இங்கே முன்வைக்கின்றேன்.

இந்த செயற்பாட்டை கண்டும் காணாது இருப்பவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் எதிர்காலத்தில் இதனை இல்லாது ஒழிப்பதற்கு ஒரு பிரதேச சபையாக நாம் அனைவருடனும் சேர்ந்து செயற்பட வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை அனைவரும் இந்த தீர்மானத்திற்கு உங்களுடைய ஆதரவை தாருங்கள் என தெரிவித்தார்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த சபையின் உறுப்பினர் சிவகுரு பாலகிருஷ்ணன் புத்தி சுவாதீனமற்றவர்களுக்கு கொடுக்கக்கூடிய போதை மருந்தை அதனை வெளியில் எடுத்து விற்பனையில் ஈடுபட்ட  மூன்று வைத்தியர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இதை யார் கொண்டு வந்தது இந்த மருந்து எதற்காக கொண்டுவரப்பட்டது உண்மையாகவே புத்திசுவாதீனமானவர்களின்  சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டது. அதனை எங்களுடைய மருத்துவர்களை கொண்டு வந்த வெளியில் விற்றால் பின்பு எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்.

ஒரு வைத்தியராக இருக்கக்கூடியவர் மனித உயிரை பாதுகாக்க வேண்டியவர் வெளியில் கொண்டு வந்து இவ்வாறு போதை மாத்திரையை விற்க முடியுமா? பிறகு நாங்கள் ஏன் முப்படையுடன் வாதிட வேண்டும். ஆகவே அனைத்து தரப்புகளும் உணர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனையடுத்து சபையில் கருத்து வெளியிட்ட உறுப்பினர் நடராஜா மத்திய அரசே இதனை கட்டுப்படுத்துவதற்கு முன் வர வேண்டும் என தெரிவித்தார்.

அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளித்த நிலையில்  இந்நிலையில் போதைவஸ்தை முற்றாக ஒழிப்பதற்கு வலிமேற்கு பிரதேச சபை தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் அனைத்து நிறுவனங்களுடனும்  இணைந்து செயற்படுவதற்கும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிற செய்திகள்

Leave a Reply