வெடிமருந்துகளைப் பயன்படுத்தி மீன்கள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்கு விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்றொழில் அமைச்சருக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (2022-10-28) ஆலோசனை வழங்கினார்.
கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி வைத்தார்.
இதன் போது – புத்தளம், கல்பிட்டியை அண்மித்த கடற்பரப்பில் வெடிமருந்துகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதால் டொல்பின்கள் மற்றும் நீலத்திமிங்கலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் திரு.யாதாமினி குணவர்தன பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்த்தன “வெடிமருந்துகளின் பயன்பாட்டினால், கடல் சுற்றுச்சூழல் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், மீன்பிடித் தொழிலின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. இலங்கையைச் சூழவுள்ள கடல் வலயத்தில் டொல்பின்கள் காணப்படுவதால், அதற்கேற்ப பல சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வர முனைவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த, விடயம் தொடர்பில் மீனவர்களுடன் கலந்துரையாடி கடல் அமைப்பு மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி அறிக்கையொன்றை தயாரிக்குமாறும் பிரதமர் பணிப்புரை விடுத்தார்.
இதற்கான பரிகாரங்கள் அடங்கிய அறிக்கை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் பிரதமரிடம் கையளிக்கப்படும் என தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதன்பின்னர் அமைச்சரவையிலும் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், தடைசெய்யப்பட்ட கருவிகளை பயன்படுத்தி நடாத்தப்படும் மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்கு கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள் மெதுவான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதையிட்டு வருந்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் திரு.யாதாமினி குணவர்தன தெரிவித்தார்.
தென் மாகாணத்தின் கடற்பகுதிகளில் இவ்வாறான சட்டவிரோத உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர், ஏனைய கடற்பரப்புகளில் சட்டவிரோதமான முறையில் மீன்கள் கொல்லப்படுவதைத் தடுப்பதில் தாமதம் ஏற்படுவது ஏன் என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை மேற்கொள்ளவும் மீனவர்களுக்கு வெடிமருந்துகள் கிடைப்பதைத் தடுக்கவும், சட்டவிரோதமான முறையில் மீன்களைக் கொல்பவர்களுக்கு எதிரான சட்ட விதிகளை அதிகரிக்கவும், காவல்துறை மற்றும் கடற்படையின் உதவியுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதான சோதனையை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கலந்துரையாடலில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் திரு.அசோக பிரியந்த மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் இந்து ரத்நாயக்க, கடற்றொழில் திணைக்களம் மற்றும் நாரா நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



பிற செய்திகள்

