2020/2021 ம் ஆண்டு தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால் நடாத்தப்பட்ட உற்பத்தி திறன் போட்டியில் திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு பாராட்டு சான்றிதழ் கிடைக்கப்பெற்றது.
விருது வழங்கும் நிகழ்வு நேற்று (27) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றதுடன் மாவட்ட செயலகம் சார்பாக மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழினை பெற்றுக்கொண்டார்.
திருகோணமலை மாவட்ட செயலகம் வரலாற்றில் முதல்தடவையாக கடந்த முறை தேசிய உற்பத்தி திறன் போட்டிக்கு விண்ணப்பித்ததுடன் போட்டியில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த, பாராட்டு சான்றிதழ் இன்று மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரமவிடம் கையளிக்கப்பட்டது. மாவட்ட செயலகம் முதல்தடவையாக இவ்வாறானதொரு போட்டியில் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழை பெற்றமை வரவேற்கத்தக்கது.
முன்னாள் அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலில் இப்பாராட்டு சான்றிதழை பெற ஒன்றிணைந்து செயற்பட்ட உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் பாராட்டுதல்கள் உரித்தாகட்டும்.
உற்பத்தி திறன் என்பது வெறுமனே கோவைகள் அலங்காரப்படுத்தப்படுவது மாத்திரம் கிடையாது. அதனுள் பல விடயங்கள் உள்ளடங்கியுள்ளன. சேவை நாடி வரும் மக்களது தேவைகளை நிறைவேற்றும் வகையில் உத்தியோகத்தர்களாகிய நாம் அனைவரும் அர்ப்பணிப்புடனான சேவையை வழங்குவது மிகவும் வேண்டப்படுவதாக இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட செயலகம் சார்பில் உற்பத்தி திறன் போட்டியில் பங்குபற்றிய கிளை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

பிற செய்திகள்

