
கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு ஆளுநர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகளின் நேரடி பங்களிப்பு மிகவும் அவசியமானது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் ஜூம் தொழில்நுட்பத்தின் ஊடாக மாகாண ஆளுநர்களுடன் நடைபெற்ற கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
இத்திட்டம் கிராமப்புற மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட விவசாய ஏற்றுமதி பயிர்களின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தப்படும்.
அத்தகைய பயிர்களை உற்பத்தி செய்வதில் விவசாயிகளுக்கு ஆதரவளிக்க அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
மாகாண மட்டத்தில், சுற்றுலாத் துறையின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், அனைத்து மாகாணங்களிலும் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல விமான நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவைகளை மீள ஆரம்பிக்க தயாராக உள்ளதால், வெளிநாட்டு வருமானத்தை அதிகரிப்பதற்கு பாரம்பரிய முறைகளுக்கு அப்பால் செல்ல வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு துறையிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தின் மூலம் அதிக நன்மைகளைப் பெற முடியும் என்பதால், தனியார் துறையின் ஆதரவைப் பெறுவதும் முக்கியம்.
தேசிய மட்டத்தில் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய பொருளாதார செயற்பாட்டை நாடு ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.
பிற செய்திகள்

