சிறுமியின் தங்கச் சங்கிலியை அறுத்த சிப்பாய்!

யாழ்ப்பாணம் வலி வடக்கு பலாலி வள்ளுவர் புரத்தில் வீதியில் சென்ற சிறுமியின் சங்கிலியை அபகரித்துத் தப்பித்தவர் பொதுமக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

இலங்கை இராணுவத்தில் பணியாற்றுபவரே இவ்வாறு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில்மேலும் தெரியவருவதாவது,

14 வயதுச் சிறுமியொருவர் தனியார் கல்வி நிலையத்துக்கு சென்றுவிட்டு வீடு நோக்கி வீதியில் நடந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்தவர் சங்கிலியை அபகரித்துவிட்டு சிறுமியை கீழே தள்ளிவிட்டுள்ளதுடன் சங்கிலியை காப்பாற்ற குறித்த சிறுமியும் கடுமையாக போராடிய நிலையில் இறுதியில் குறித்த நபரிடம் சங்கிலியை பறிகொடுத்தார்.

இதேவேளை சங்கிலியை பறிகொடுத்த சிறுமி காயத்துக்குள்ளாகிய நிலையில் தெல்லிப்பளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் ஊரவர்கள் ஒன்றிணைந்து சிறுமியிடம் அத்துமீறிய இராணுவ சிப்பாயை மடக்கிப்பிடித்தனர்.

குறித்த சிப்பாய் இலங்கை இராணுவத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் கொல்லங்கலட்டியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

[embedded content]

Leave a Reply