
காணி உறுதிப்பத்திரமற்ற சகல காணிகளுக்கும் நடமாடும் சேவைகள் ஊடாக ஸ்வர்ணபூமி மற்றும் ஜயபூமி உள்ளிட்ட காணி உறுதிப் பத்திரங்கள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) நடைப்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன் ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 1 இலட்சம் காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் இந்த வருட இறுதிக்குள் 75 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்களை வழங்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1972 ஆம் ஆண்டு காணி சீர்திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்தே சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் காணி உறுதிப் பத்திரம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன உறுதியளித்துள்ளார்.
இதேவேளை கடந்த காலத்தில் 200 காணி உறுதிப் பத்திரங்கள் காணாமல் போயுள்ளன. ஒரு ஏக்கர் காணி ரூபாய் 500க்கு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த விடயம் தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.





