குளியலறை சாதனங்கள் தடை குறித்து வெளியான தகவல்

1969ஆம் ஆண்டின் முதலாம் இலக்க ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் குறித்த 2296/30ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்களை அனுமதிப்பதற்கு முன்னர் இது தொடர்பில் மேலும் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், இதற்கு அனுமதி வழங்கினால் நுகர்வோருக்கு அநீதி இழைக்கப்படுகிறதா என்பது குறித்து ஆராயப்பட வேண்டியிருப்பதாகவும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் நேற்றுக் (01) கூடிய போதே இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது.

இந்த வர்த்தமானிப் பத்திரிகையின் ஊடாக குந்தியிருந்து மலங்கழிக்கும் பாத்திரம் (Squatting pans), ஸெரோவ் ஸேன் (sink) உள்ளிட்ட குளியலறை சாதனங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வர்த்தமானியின் ஊடாக டைல்ஸ் இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதன் ஊடாக சந்தையில் ஏற்படக்கூடிய ஏகபோக உரிமை மற்றும் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் டைல்ஸ் உள்ளிட்ட குளியலறை சாதனங்களின் விலைகள் நியாயமற்ற முறையில் நுகர்வோருக்கு அதிகரிக்கப்படுகின்றமை போன்று, கேள்விக்கு ஏற்ற உற்பத்தி இல்லாமல் போகின்றமை குறித்த விடயங்கள் குழுவின் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவ்விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு நிதி அமைச்சுக்கு குழு, பணிப்புரை விடுத்தது.

2298/55ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டதுடன், இதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. இந்த வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக வெளிநாட்டுக்குச் சென்ற பணியாளர் நாட்டுக்கு அனுப்பும் பணத்தின் பெறுமதிக்கு அமைய இலத்திரனியல் மோட்டார் வாகனத்தை இறக்குமதி செய்யவதற்கு அனுமதி வழங்கப்படும்.

2297/79ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான ஒழுங்கு விதி குறித்தும் அரசாங்க நிதி பற்றிய குழுவினால் கவனம் செலுத்தப்பட்டது.

இதன் ஊடாக அத்தியாவசிய பொருட்கள் திறந்த கணக்கின் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் காலம் நீடிக்கப்படுகிறது. அத்துடன் கடந்த இரண்டு வருட காலத்திக்குள் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி, சோளம் உள்ளிட்ட ஏனைய பொருட்களின் அளவு எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது என்பது தொடர்பில் குழு கவனம் செலுத்தியது.

தேவைக்கு அதிகமாக அரிசி இறக்குமதிசெய்யப்பட்டு அது கலப்படம் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் குழுவின் கவனத்துக் கொண்டுவரப்பட்டதுடன், கால்நடைத் தீவன உற்பத்திக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் உள்ளதால் முட்டை, கோழிப்பண்ணை தொழில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருவதாகவும், இதனால் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை அதிகரித்திருப்பதாகவும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

இந்த நிலைமைகள் குறித்து ஆராயும் போது சரியான மற்றும் அடிப்படையான தகவல்கள் ஏதும் இல்லாமை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய குழு, இது தொடர்பான தெளிவான தரவுகள் அடங்கிய அறிக்கையை 02 மாத காலத்திற்குள் தம்மிடம் சமர்ப்பிக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பரிந்துரைத்தது.

2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழு கலந்துரையாடியதுடன், இம்முறை முன்வைக்கப்பட்ட மதிப்பீடுகள் தொடர்பில் நிதியமைச்சு எந்தளவு நம்பிக்கையுடன் உள்ளது என குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த வரவுசெலவுத்திட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, கலாநிதி சுரேன் ராகவன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, பிரேம்நாத் சி. தொலவத்த, மதுர விதானகே ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply