
எகிப்து சென்று பிரமிட்டை பார்க்க்கூடிய இயலுமை கொண்டுள்ள ஜனாதிபதியினால் சக மக்களாக பெருந்தோட்ட மக்களை நோக்கி பார்வையை திருப்ப இயலாமல் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்து உரையாற்றும்போது, அவர் இதனைத் தெரிவித்தார்.
பெருந்தோட்ட மக்களிடையே, மந்த போசணை நிலை அதிகரித்துள்ளதுடன் பாடசாலைக்கு மாணவர் வருகையும் குறைவடைந்துள்ளது.
புள்ளிவிபரங்களுக்கு, உண்மை நிலைக்கும் இடையில் பாரிய வித்தியாசம் உள்ளது. இந்த புள்ளிவிபரம் உண்மை நிலையை மறைக்கும் ஒரு ஆயுதமாகும்.
23 இலட்சம் சிறுவர்களுக்கு உணவு இல்லை. உணவு இன்மை மற்றும் பேருந்து கட்டணம் அதிகரிப்பினால் பெரும்பாலான மாணவர்கள் பாடசாலை செல்வதை தவிர்த்துவருகின்றனர்.
விசேடமாக இந்த நிலைமை பெருந்தோட்ட பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது.
நாடளாவிய ரீதியில் நிறை குறைந்த குழந்தைகள் பிறப்பு வீதம் 12.5 சதவீதமாகும். நுவரெலியா மாவட்டத்தில் இது 20 சதவீதமாக காணப்படுகிறது.
அத்துடன், நாடளாவிய ரீதியில் உயரத்திற்கேற்ப நிறையில்லாத சிறுவர்களின் வீதம் 8.2 சதவீதமாகவும், பெருந்தோட்ட பகுதிகளில் 17.4 சதவீதமாகவும் காணப்படுகிறது.
நாட்டின் பொருளாதாரதம்துக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் பெருந்தோட்ட மக்கள் நாட்டின் ஏனைய சமூகத்தினரை காட்டிலும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை ஜனாதிபதியோ, அரசாங்கமோ கண்டுகொள்வதில்லை என்றார்.
இந்த பிரேரணை வழிமொழிந்த நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், பெருந்தோட்டப்பகுதியில் பாரியளவான உணவு பாதுகாப்பு இன்மை நிலை காணப்படுவதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது என்றார்.
நகரப்புறங்களில் 43 சதவீதமாகவும், கிராமங்களில் 34 சதவீதமாகவும் காணப்படும் இந்த உணவு பாதுகாப்பின்மை நிலைமையானது, பெருந்தோட்ட பகுதிகளில் 51 சதவீதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் 3 வேளை உணவு, இரண்டு வேளையாகி, தற்போது ஒருவேளையாக சுருங்கியுள்ளது.
ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு, நவீன அடிமைத்துவம் தொடர்பான ஐநா சிறப்பு அறிக்கையாளர், டொமாயோ ஒபகாட்டா அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளார்.
அதில் தோட்டப்புற தமிழர்கள் என்பதால் அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனரா என்று சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினை மனித உரிமைகள் பேரவைக்கு எடுத்த செல்ல நான் விரும்பவில்லை. அந்த நிலைக்கு எம்மை தள்ளிவிட வேண்டாம் என்பதை கூறவேண்டும்.
நுவரெலியாவில் 5 ஆக காணப்படும் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை 10 ஆக அதிகரித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. எனினும், அதனை செயற்படுத்தாமை மிகவும் பாரபட்சமான செயலாகும் எனத் தெரிவித்தார்.
நாம் நாட்டை துண்டாட விரும்பவில்லை. இலங்கையர்களாக எம்மையும் இணைத்துக்கொள்ளுமாறே கோருகின்றோம்.
ஏனைய சமூகத்தினருடன் ஒப்பிடுகையில், மலையக மக்களுக்கு காணி உரிமை, வீட்டுரிமை இல்லை. தொழில் வாய்ப்பு மற்றும் சுகாதார வசதிகளிலும் பின்தங்கியுள்ளனர்.
எனவே, இது குறித்த அரசாங்க விரைந்து உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்றார்.





