
தரம்– 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடத்துவதற்கு அறிவிக்கப்பட்ட திகதிகளில் மாற்றம் இல்லையென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசெம்பர் மாதம் 18ஆம் திகதியும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை அடுத்தாண்டு ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதிவரை நடைபெறும்.
முன்னதாக இந்த வருட டிசெம்பர் மாதத்தில் நடத்த திட்டமிருந்த உயர்தரப் பரீட்சையை மாணவர்கள் மற்றும் மக்களிடமிருந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய மேற்கண்டவாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா நெருக்கடி, நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் மற்றும் ஒன்பது மாகாணங்களிலும் உயர்தரப் பாடத்திட்டத்தை நிறைவு செய்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்த ஒத்திவைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அறிவிக்கப்பட்ட புதிய பரீட்சை திகதிகளில் மாற்றம் செய்யப்படாது. அறிவிக்கப்பட்ட திகதிகளில் பரீட்சைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.





