டில்லியில் மோடியை சந்திக்காமல் வெறுங்கையோடு திரும்பிய பஸில்

இந்தியாவிடம் பெருந்தொகையான பொருளாதார உதவிகளைப் பெறும் திட்டத்துடன் புதுடில்லி பறந்த நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நேற்று கொழும்பு மீண்டார்.

அங்கு அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பார் எனக் கூறப்பட்ட போதிலும் அந்தச் சந்திப்பு இடம்பெற
வில்லை.

அதேபோல் இந்தியாவிடம் எதிர்பார்த்த பெருளாதார உதவிகளையும் அவரால் பெறமுடியாமல் போயிற்று என்றும் சில வட்டாரங்கள் முதலில் செய்தி வெளியிட்டன.

‘வீரமும் களத்தே போக்கி வெறுங்கையுடன் இலங்கைபுக்கான் என்ற இராவணேஸ்வரன் போல் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவும் எதிர்பார்த்த பொருளாதார உதவித் திட்டங்கள் கிட்டாத நிலையில் நாடு மீண்டிருக்கின்றார் எனக் கூறப்பட்டது.

கடைசியாக இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளர் இலங்கை வந்திருந்த போது, அவருக்கு உறுதியளிக்கப்பட்ட சில விடயங்களை கொழும்பு இன்னும் நிறைவேற்றாதமை குறித்து பஸிலின் இந்த விஜயத்தின்போது புதுடில்லி தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது எனவும் கூறப்பட்டது.

நவம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் பலாலி சர்வதேச விமான நிலையத்தை மீளத்திறத்தல், காரைக்கால் – காங்கேசன் படகுச் சேவையை ஆரம்பித்தல் போன்ற நடவடிக்கைகளும் கொழும்பால் உறுதியளிக்கப்பட்டு தவறவிடப்பட்ட விடயங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன.

நிதி அமைச்சர் பஸிலின் புதுடில்லி விஜயம்தொடர்பில், புதுடில்லியில் உள்ள இலங்கைத் தூதரகம் விடுத்த செய்திக் குறிப்பில் இந்தியா பல உதவித் திட்டங்களை இலங்கைக்கு வழங்குவதற்கு உறுதியளித்திருக்கின்றது என்று கூறப்பட்டா
லும், நிதி அமைச்சர் பஸில் எதிர்பார்த்த காத்திரமான உதவிகளை இந்தியாவிடமிருந்து அவரால் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply