தொழிலுக்காக பெண்கள் வௌிநாடு செல்வதில் விதிக்கப்பட்டுள்ள புதிய தடை!

நாளை (11) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பெண்களை, வீட்டு மற்றும் பயிற்சியற்ற துறைகளில் தொழிலுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களால் அனுப்பும் நடைமுறையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

சுற்றுலா வீசா மூலம் வெளிநாட்டு தொழில்களுக்குச் சென்ற பெண்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக பணியகம் மேலும் தெரிவிக்கிறது.

இவர்களில் பெரும்பாலானோர் ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வேலைக்குச் சென்றவர்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா வீசாவில் சென்று வேலையின்றி இருப்பதாகவும், எந்தவொரு நிறுவனமோ அல்லது நபரோ இவர்களை பொறுப்பேற்க முன்வராததால், அவர்கள் தவறாக நடத்தப்படுவதாக இலங்கை தூதரகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி, அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ள நிலையில், சுற்றுலா வீசா மூலம் பயிற்சியற்ற தொழில்களுக்கு பெண்களை பரிந்துரைப்பதை தடை செய்யுமாறு தொழில் அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதாகக் கூறி பண மோசடி செய்த 570 நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பில் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இவ்வாறான 182 முறைப்பாடுகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மோசடியான முறையில் பெற்ற 28,383,000.00 ரூபாவை முறைப்பாட்டாளர்களுக்கு மீள பெற்றுக் கொடுக்க பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடியான வெளிநாட்டு வேலை வாய்ப்பு சம்பவங்கள் தொடர்பில் பணியகத்திற்கு செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் 17 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டு 43 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பணியகம் அறிவித்துள்ளது.

அத்துடன், இவ்வருடத்தில் சட்டவிரோதமான முறையில் தொழில் நிமித்தம் வெளிநாடு செல்ல முயற்சித்த 586 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இவ்வருடம் ஜனவரி மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் சுற்றுலா வீசாக்களை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்த சிலரே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *