கபளீகரம் செய்த காணிகளை மீளளித்து நல்லிணக்கத்தைக் காட்டுங்கள்-நீதி அமைச்சருக்கு சுரேஷ் அறிவுரை

வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களைக் கபளீகரம் செய்து, அரசாங்கத்தின் செலவில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி, எமது பிரதேசங்களின் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றம் செய்து, எமது குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் திட்டத்தைக் கைவிட்டு, கபளீகரம் செய்த காணிகளை விடுவித்து எமது மக்களை நிம்மதியாக அவர்களது பிரதேசத்தில் வாழவிடுவதே நல்லிணக்கத்திற்கான முதற்படி என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, ‘காணி தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளை தமிழ்த் தரப்பினர் தெரிவித்துள்ளனர். அவற்றிற்கு யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வு காணப்படும்’ என்று கூறியிருந்தார்.

அவரின் கூற்றுக்கு பதிலளிக்கும் வகையிலேயே சுரேஷ் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யுத்தம் முடிந்தபின் காணிகள் தொடர்பான பிரச்சினை என்பது ஒரு பூதாகரமான பிரச்சினையாக மாறியுள்ளது. ‘பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்ததுபோல்’ யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் சொந்தக் காணிகளுக்கு மீளவும் குடியேற முடியாத நிலையே இன்னமும் தொடர்கின்றது. 

எமது மக்கள் ஏற்கனவே விவசாயம் செய்த நிலங்கள் வனத்துறையினரால் அவை வனபரிபாலன துறையினருக்குச் சொந்தமானது என அடையாளமிடப்பட்டுள்ளது. இதனால் தமது சட்டபூர்வமான காணிகளுக்குப் போகமுடியாமல் மக்கள் அதிகாரிகளை நாடி அங்கும் இங்கும் அலையும் நிலை தோன்றியுள்ளது. இது ஒருபுறமிருக்க, தொல்லியல் பிரதேசங்கள் என்ற அடிப்படையில் பல்வேறுபட்ட புராதானச் சின்னங்கள் இருக்கக்கூடிய இடங்களையும் அதனைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தையும் தொல்லியல்துறைக்குச் சொந்தமானது என்ற அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து கபளீகரம் செய்யும் நிலைமையும் வடக்கு-கிழக்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. புராதான சின்னங்களும் தொல்லியல் சார்ந்த பகுதிகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உலகளாவிய கருத்து. 

வடக்கு-கிழக்கு மாகாணங்களிலும் பல்வேறுபட்ட புராதான இடங்கள் பாதுகாக்கப்பட்டே வருகின்றன. தமிழ் மக்கள் யாரும் அவற்றை அழிக்க வேண்டும் என்று சிந்திக்கவில்லை. தொன்மையான இடங்களும் புராதானச் சின்னங்களும் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் அரசாங்கத்திலும்விட பன்குமடங்கு அதிகமாகவே நாங்கள் அக்கறை கொண்டிருக்கின்றோம். நாட்டின் வரலாற்றை மாற்றியமைத்து, பௌத்த சின்னங்கள் அனைத்தும் சிங்கள மக்களுக்குரியது போலவும், அவ்வாறான இடங்கள் அனைத்தும் தமது கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்பது போலவும் அத்தகைய இடங்களில் வாழும் தமிழ் மக்களை விரட்டியடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அநாகரிகமான அருவருக்கத்தக்க செயலாகும். அதனையே இன்றைய அரசாங்கமும் பௌத்த பிக்குகளும் செய்து வருகின்றனர்.

பிரித்தானியர்கள் இங்கு வருவதற்கு முன்னர், இலங்கை யாழ்ப்பாண ராஜ்ஜியம், கண்டி ராஜ்ஜியம், கோட்டை ராஜ்ஜியம் என்னும் ராஜ்யங்களைக் கொண்டிருந்தது என்பது இலங்கையின் வரலாறு. அது மாத்திரமல்லாமல், இந்தியாவின் தமிழகத்திலும், இலங்கையிலும் தமிழ் மக்களும் பௌத்தத்தை தழுவியிருந்தனர் என்பதும் வரலாறு. கடைசி கண்டிய மன்னரான விக்கிரமராஜசிங்க தமிழில்தான் கையெழுத்திட்டார் என்பதும் அப்பொழுது நீதிமன்ற மொழியாக தமிழே இருந்தது என்பதும் வரலாறு. 

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பாக அனுராதபுரம், பொலனறுவை மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்தனர் என்பதும் சுதந்திரத்தின் பின்னர், அரசாங்கங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட அரச வன்முறையினூடாக அவர்கள் அப்பகுதியிலிருந்து விரட்டப்பட்டனர் என்பதும் வரலாறு. இன்றும்கூட இந்த மாவட்டங்களில் இருக்கின்ற காணிகளின் மிகப்பழமையான உறுதிகளைப் பார்த்தால் அவை தமிழ் மக்களுக்குச் சொந்தமானவை என்பதைக் காணமுடியும். வரலாறு இவ்வாறிருக்க, பௌத்த சின்னங்கள் இருந்ததாகக் கூறி வடக்கு-கிழக்கில் காணிகளை ஆக்கிரமிப்பதும், சைவக்கோயில்களை உடைத்து, பௌத்த கோயில்களை நிர்மாணிப்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல.

அண்மையில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்கள் வடக்கு மாகாணத்திற்கு வந்திருந்தபொழுது, காணிவிவகாரம் தொடர்பில் பல முரண்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைத்துள்ளனர் என்றும் இவை தொடர்பில் நாம் நேரில் ஆராய்ந்து விரைந்து தீர்வு காண்போம் என்றும் எந்தத் தரப்பும் பாதிக்காத வகையில் நாம் தீர்மானங்களை எடுப்போம் என்றும் கூறியிருந்தார். 

யுத்தம் முடிந்த பின்னர், வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள கொக்கச்சான்குளம் கிராமத்தில் அரச செலவில் அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்து ஹம்பாந்தோட்டைப் பிரதேசத்திலிருந்து சிங்கள மக்களை அழைத்து வந்து குடியேற்றியதுடன் அந்தக் கிராமத்திற்கு போகஸ்வௌ என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதைப்போலவே முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு என்ற தமிழ்ப் பிரதேசம் மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் மகாவலி எல் வலயம் என்று பெயரிடப்பட்டு அங்கும் வெளிமாவட்டங்களிலிருந்து சிங்கள மக்களை அழைத்துவந்து குடியேற்றி அதற்கு வெலிஓயா என் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. 

எந்தத் தரப்பும் பாதிக்காத வகையில் நாம் தீர்வுகாண்போம் என்னும் அமைச்சருக்கு இந்தக் குடியேற்றத்திட்டங்களால் தமிழ் மக்களுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கப்பட்டிருக்கின்றது என்பது புரியாதா? உங்களது முக்கிய நோக்கமெல்லாம் வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் இத்தகைய குடியேற்றங்களின் ஊடாக தமிழ் மக்களின் குடிசனப் பரம்பலைக் குறைத்து அவர்கள் பாரம்பரியமாக வாழும் அவர்களது சொந்த மண்ணிலேயே அவர்களை சிறுபான்மையினராக்கும் முயற்சியன்றி வேறு என்ன? அரசின் அனுசரணையுடன் தமிழ் மக்களின் காணிகளைப் பறிமுதல் செய்து சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டிருக்கும் அதேநேரம் யாருக்கும் பாதிப்பில்லாமல் பிரச்சினைகளைக் கையாள்வோம் என்று சொல்வது முரண்பாடான விடயம் மாத்திரமல்ல, அதற்கும் மேலாக உங்கள்மீது யாரும் நம்பிக்கைகொள்ளும் விடயமும் அல்ல. 

ஆகவே, தமிழ் மக்களின் காணிகளைப் பறிப்பதற்காக நீங்கள் மேற்கொள்ளும் வனஜீவராசிகள் திணைக்களம், வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களம், வனஇலாகா, தொல்பொருள் திணைக்களம், பறவைகள் சரணாலயம் போன்ற திணைக்களத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் முதற்கட்டமாக வடக்கு-கிழக்கில் முழுமையாக நிறுத்துவது காணிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆரம்ப கட்டமாக அமையும்.

புராதானச் சின்னங்கள் புராதானச் சின்னங்களாகவே இருக்க வேண்டும் என்பதுடன் அவை எப்படி இருக்கின்றனவோ அவ்வாறே அவைகள் பாதுகாக்கப்படவேண்டும். சிகிரியா, அனுராதபுரம், மிகிந்தலை, பொலனறுவை போன்ற பிரதேசங்களில் புராதானச் சின்னங்களை எவ்வாறு நீங்கள் அவற்றில் எந்த மாற்றமும் இன்றிப் பராமரிக்கின்றீர்களோ அதனைப் போன்றே வடக்கு-கிழக்கில் இருக்கின்ற புராதானச் சின்னங்களும் பராமரிக்கப்படவேண்டுமே தவிர, அங்கு புதிய பௌத்த கோயில்களைக் கட்டுவதோ தமிழ் மக்களை விரட்டுவதோ தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகளாக இருக்கக்கூடாது, இருக்க முடியாது. 

இறுதியாக அரசாங்கத்திற்கு ஒரு விடயத்தைக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். யுத்தமென்பது அடிப்படையில் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை, வரலாற்றுப் பூர்வமான வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான யுத்தம். அதில் பல இலட்சக்கணக்கான மக்களை நாங்கள் இழந்திருக்கின்றோம். இவற்றிற்கு நீதியின் அடிப்படையிலும், இந்த மண்ணின் பூர்வீகக் குடிமக்கள் என்ற அடிப்படையிலும் தீர்வுகள் எட்டப்படவேண்டும்.

படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில் என்னும் தமிழின் முதுமொழிக்கு ஏற்ப, ஒரு பக்கம் நல்லிணக்கம், யாருக்கும் பாதிப்பின்றி தீர்வு எட்டுவது என்று சொல்லிக்கொண்டு மற்றொருபக்கம் தமிழ் மக்களின் இருப்பை இல்லாமற் செய்யும் செயலை நீங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply