கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பெரிதும் பங்காற்றிய சுகாதார பிரிவினரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று யாழில் இன்று இடம்பெற்றது.
தல்செவன் இராணுவ விடுதியில் இடம்பெற்ற இந்நிகழ்வு, பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதியும் கொவிட் 19 கட்டுப்பாட்டு மையத்தின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளருமாகிய மேஜர் ஜெனரல் ஜெகத் கொடித்துவக்கு
தலைமையில் நடைபெற்றது.
யாழ் குடாநாட்டினுள் வைரஸ் தொற்றுப்பரவலினை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் எக்கணமும் அயராது, தமது உயிரைக்கூடப் பொருட்படுத்தாது இதுவரைகாலமும் அனைவரதும் நலனுக்காகவும் சுகாதார பிரிவினர் தம்மை அர்ப்பணித்துள்ளனர்.
அவ்வாறு தம்மை அர்ப்பணித்த 29 வைத்திய அதிகாரிகள், 86 சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் 20 குடும்பநல உத்தியோகத்தர்கள் ஆகியோரின் சேவையினைப் பெருந்தன்மையுடன் பாராட்டி, அவர்களை கௌரவித்து சான்றிதழ் வழங்கபட்டுள்ளது.
அதனை தொடந்து அவர்களுக்கு மதிய போசணை விருந்தும் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரச அதிபர் கே. மகேசன் , வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன், யாழ். மாவட்ட தொற்றுநோய் தொடர்பான வைத்திய நிபுணர் பீ பரணிதரன் உட்பட சுகாதாரப் பிரிவின் வைத்திய அதிகாரிகள் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள், படைப்பிரிவுகளின் சேனாதிபதிகள், இராணுவ சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் உட்பட கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, பாதுகாப்புப் படை கட்டளைத்தளபதிக்கு பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தினால் அண்மையில் விசேட கௌரவிப்பு நிகழ்வொன்று யாழில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



