இவ்வருட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சிகரெட் வரியை குறைந்தது 20 ரூபாவினால் அதிகரித்து நாட்டின் வருமானத்தைப் பெருக்கும் விஞ்ஞான வரிக் கொள்கையை ஏற்படுத்துவோம் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், புபுது சுமனசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில், முறையான முறையில் சிகரட்டிற்கான வரியை அதிகரிக்காததன் காரணமாக, 84% பங்கு உரிமை கொண்ட பிரிட்டிஷ் அமெரிக்கன் புகையிலை கம்பனி (BAT) க்கு சொந்தமான இலங்கை புகையிலை நிறுவனம் (CTC) எனப்படும் பன்னாட்டு நிறுவனம் சிகரட்டிற்கான விலையை உயர்த்தியதன் மூலம், இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய ரூபா 100 பில்லியன்களை இழந்துள்ளது.
சிகரெட் விலையை உயர்த்தியதன் மூலம் நாட்டுக்கு சேர வேண்டிய வரிப்பணம் பிரிட்டிஷ் அமெரிக்க புகையிலை நிறுவனத்தின் இலாபமாக மாறியது. இவ்வாறு, வெளிநாட்டு நிறுவனங்கள் இலாபம் பெறுவதன் மூலம் உள்நாட்டு பணம் சுரண்டியெடுக்கப்படுகிறது.
தற்போது, இலங்கை ஒரு முக்கியமான பொருளாதார நெருக்கடியில் உள்ளது, மேலும் நாட்டின் நீண்ட கால நிதிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்தின் அவசர, கடினமான ஆனால் அவசியமான கொள்கைத் தீர்வுகள் இருந்தபோதிலும், புகையிலை வரிகள் போதுமான அளவு அதிகரிக்கப்படாதது ஆச்சரியமளிக்கிறது.
குறிப்பாக, அரசின் வருமானத்தை அதிகரிக்கக் கூடிய, எளிய மற்றும் சாதாரண மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தாத, இந்தத் துறைகளில் கவனம் செலுத்துவதே ஒரு அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். சிகரட் மீதான வரியை அதிகரிப்பதன் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க முடியும், அதிகளவான வரிப்பணத்தை ஒரே தடவையில் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் அது அமுல்படுத்தாமல் இருப்பதானது வியப்புக்குரியதே!
மதுசாரம்; மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC), செப்டம்பர் 2021 இல் நடாத்திய பொதுக் கருத்துக் கணிப்பில், சிகரட் வரிகளை அதிகரிப்பதற்கு பொதுமக்கள் மத்தியில் பரந்த ஆதரவை உறுதிப்படுத்தியது. பதிலளித்தவர்களில் 89.3மூ பேர் (புகைப்பவர்கள் உட்பட) அரசாங்க வருமானத்தை அதிகரிக்க புகையிலை வரிகளை அதிகரிப்பதற்கு பொது மக்களின் ஆதரவு உள்ளது என உறுதியாகியுள்ளது.
கோள்கை ஆய்வுகளுக்கான நிறுவனம் (IPS),மதுசாரம் மற்றும் புகையிலை மீதான அதிகார சபை (NATA) மற்றும் துறை சார்ந்தவர்களின் கூற்றுப்படி, ஏற்கனவே முன்மொழியப்பட்ட புகையிலை வரி முறையைப் பின்பற்றி, அனைத்து வகையான சிகரட்டுகளுக்கும் ஒரே வரி முறையை அறிமுகப்படுத்தினால், அரசாங்கம் சுமார் 40 பில்லியன் ரூபாய் கூடுதல் வரி வருமானத்தை ஈட்ட முடியும்.
எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக மேற்படி வரிவிதிப்பு முறைமையை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டுமென மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் வலியுறுத்துகின்றது.
அரசாங்கம் எதிர்கொள்ளும் கடுமையான நிதி நெருக்கடிக்கு இது மற்றுமொரு நீண்ட கால தீர்வாகும். அதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுமாறு மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறது.
1. அனைத்து வகையான சிகரட்டுகள் மீதான வரியை குறைந்தது 20 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும்.
2. 2021 வரவுசெலவுத் திட்ட உரையில் சிகரட்டுக்கான வரிக் கொள்கை எனும் தலைப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளதற்கேற்ப பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட விஞ்ஞான, எளிய மற்றும் பகுத்தறிவு வரி கொள்கை முறையை மிக விரைவாக நிறுவப்பட வேண்டும்.
மேற்படி முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தவும், புகையிலை நிறுவனம் நாட்டிற்கு வெளியே இழுத்தெடுக்கும் இலங்கையர்களின் பணத்தை நாட்டிற்குள் தேக்கிவைப்பதற்கும், நிதியமைச்சு உட்பட அரசாங்கத்தின் பொறுப்பான தரப்பினரை வலியுருத்த வேண்டும்.
இதற்காக துறை சார்ந்தோர், மதத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், தொழில் வல்லுநர்கள், நாட்டின் மீது அன்பு கொண்ட பொது மக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் கேட்டுக்கொள்கிறது என தெரிவித்துள்ளார்.