பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த 3-ந் தேதி பஞ்சாப் மாகாணத்தில் அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் பங்கேற்றிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது வலது காலில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் உயிர் தப்பினார்.
இதையடுத்து, லாகூரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இம்ரான்கானுக்கு வலதுகாலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தனது காலில் இருந்து 3 துப்பாக்கி குண்டுகள் அகற்றப்பட்டதாக இம்ரான்கான் கூறினார்.
இந்த நிலையில் தன்னை கொல்ல முயன்ற இந்த சதி திட்டத்தின் பின்னணியில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், உள்துறை மந்திரி ராணா சனவுல்லா மற்றும் மூத்த ராணுவ அதிகாரி பைசல் நசீர் ஆகியோர் இருப்பதாக இம்ரான்கான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
துப்பாக்கி சூடு தொடர்பாக இம்ரான்கான் தரப்பில் பஞ்சாப் மாகாண போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரில் பிரதமர், உள்துறை மந்திரி மற்றும் ராணுவ அதிகாரியின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இதனால் அந்த புகாரை ஏற்று வழக்கு பதிவு செய்ய போலீசார் மறுத்து வந்தனர்.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் தானாக முன்வந்து விசாரணை நடத்திய அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு, 24 மணி நேரத்துக்குள் வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட்டது. அதன் பேரில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த 5 நாட்களுக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
எனினும் இந்த வழக்கில் பிரதமர், உள்துறை மந்திரி மற்றும் ராணுவ அதிகாரியின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்தது.
இந்த நிலையில் லாகூரில் நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களை சந்தித்த இம்ரான்கான், “ராணுவ அதிகாரி பைசல் நசீர் எனது கொலை முயற்சிக்கு மூளையாக செயல்பட்டவர் என்பது உறுதி. எனவே பாகிஸ்தானின் தலைமை நீதிபதி இதனை விசாரித்து நீதியை நிலைநாட்ட வேண்டும்” என்றார்.
போலீசார் வழக்கு பதிவு செய்தது குறித்து பேசிய அவர், “ஒரு முன்னாள் பிரதமரால் அவரது புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய முடியவில்லை என்றால், பாகிஸ்தானில் உள்ள ஒரு சாமானியருக்கு என்ன நடக்கும் என்று கற்பனை செய்யலாம். எனவே இதுகுறித்தும் சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடத்திய சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை வேண்டும்” என்று கூறினார்.