நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக விளையாடியவர் சந்தீப் லமிச்சானே (வயது 22). இவர் மீது, 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கூறினார்.
அந்த புகாரில், நண்பர் ஒருவர் மூலம் சந்தீப்பின் அறிமுகம் தமக்கு கிடைத்ததாகவும், இதனை அடுத்து ஆகஸ்டு 21-ந்தேதி காத்மண்டு ஓட்டல் ஒன்றில் தம்மை ரூமுக்கு அழைத்து சந்தீப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து சந்தீப் மீது நேபாள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பெண்ணிற்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
அவர் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்று மருத்துவ பரிசோதனைகளும் நடைபெற்றன. இதன்பின், சந்தீப்புக்கு காத்மண்டு மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்று விட்டு காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, கடந்த அக்டோபர் 6-ந்தேதி நேபாள போலீசார் அவரை கைது செய்தனர். முழு விசாரணை முடியும் வரை நேபாள கிரிக்கெட் வாரியம் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் போட்டி மற்றும் 44 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஐ.பி.எல். தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையை பெற்றவர். அவரை, வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கும் வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி கடந்த 4-ந்தேதி காத்மண்டு மாவட்ட கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், நேபாள கிரிக்கெட் கூட்டமைப்பு வெளியிட்டு உள்ள செய்தியில், நேபாளத்தின் ஆடவர் தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் பவுடெல் நியமிக்கப்பட்டு உள்ளார் என தெரிவித்து உள்ளது.
ரோகித் பவுடெல் தலைமையிலான அந்நாட்டு கிரிக்கெட் அணி கென்யாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி 3-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. பவுடெல் இதற்கு முன் நேபாள அணியின் துணை கேப்டனாகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர் ஆவார்.