உள்ளூராட்சிசபைத் தேர்தலை இரு வருடங்களுக்கு பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. இந்த சூழ்ச்சியை தோற்கடிக்க வேண்டும். அதற்காக எமது நீதிமன்றத்தை நாடும் என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
”ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது, நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, தேர்தலை இரு வருடங்களுக்கு பிற்போட ஏற்பாடு செய்கின்றோம். தவிசாளர், உப தவிசாளர் பதவிகளில் தொடர்ந்து இருங்கள் என மொட்டு கட்சி தலைவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை இவ்வாறு பிற்போட முடியாது என்பதை உறுப்பினர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இனிமேலும் உள்ளூராட்சிமன்ற தேர்தலை பிற்போடுவதாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும்.
எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் தேர்தலை நடத்தும் முடிவை தேர்தல் ஆணைக்குழு எடுக்காவிட்டால், எமது கட்சி நீதிமன்றத்தை நாடும்.” – என்றும் தயாசிறி குறிப்பிட்டார்.