ரி-20 உலகக்கிண்ணத்தை வெல்லப் போவது யார்? இங்கிலாந்து- பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை!

ரி-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் சம்பியன் கிண்ணத்திற்கான, இறுதிப் போட்டி இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

ஒருமாத காலமாக நடைபெற்றுவரும் தொடரின் இறுதிப் போட்டி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லரும் பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாமும் தலைமை தாங்கவுள்ளனர்.

நடப்பு உலகக்கிண்ணத் தொடரை பொறுத்தவரை இரு அணிகளுமே கடுமையான அழுத்தங்கள் மற்றும் ஏமாற்றங்களுக்கு மத்தியில் இறுதிப் போட்டியை தொட்டுள்ளன.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஆரம்ப போட்டிகளில் மழை குறுக்கிட, அடுத்துவந்த போட்டிகளில் கட்டாய வெற்றி என போராடி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. குறிப்பாக சுப்பர்-12 சுற்றில் டக்வத் லுயிஸ் முறைப்படி அயர்லாந்து அணியிடம் தோல்வியடைந்திருந்தது.

அடுத்துவந்த போட்டிகளில் மழைக்குறுக்கிட்டாலோ அல்லது தோல்வியடைந்தாலோ தொடரிலிருந்து வெளியேற நேரிடும் அல்லது அவுஸ்ரேலியாவுக்கு வாய்ப்பு கிடைத்துவிடும் என்ற கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் இங்கிலாந்து அணி, இலங்கை அணியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி, இந்தியா நிர்ணயித்த 168 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை எவ்வித விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்து இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

இதேவேளை, பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இந்தியாவிடம் தோல்வி, சிம்பாப்வேயிடம் அதிர்ச்சி தோல்வி என கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி, ஏறக்குறைய தொடரிலிருந்து வெளியேறி விட்டது என்ற நிலையில் இருந்த போது, தென்னாபிரிக்கா அணியை, நெதர்லாந்து அணி தோற்கடிக்க, பாகிஸ்தான் அணி, அதிர்ஷ்டவசமாக அரையிறுதிக்குள் நுழைந்தது.

அரையிறுதிப் போட்டியில், பலம்வாய்ந்த நியூஸிலாந்து அணியை, தனது ஆரம்ப துடுப்பாட்டத்தை கொண்டு மிரட்டிய பாகிஸ்தான், இலகுவான வெற்றியை பதிவு செய்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

கடந்த போட்டிகளில் சோபிக்க தவறியிருந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அணித்தலைவர் பாபர் அசாம் மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஆகியோர், நியூஸிலாந்து அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில், 105 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியின் வெற்றியை இலகுப்படுத்தினர்.

இரு அணிகளும் ரி-20 உலகக்கிண்ணத் தொடரை பொறுத்தவரை இரண்டு முறை மோதியுள்ளன. அதில் இரண்டு போட்டிகளிலுமே இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.

சர்வதேச ரி-20 போட்டிகளை பொறுத்தவரை இரு அணிகளும் 28 முறை மோதியுள்ளன. இதில் 18 முறை இங்கிலாந்து அணியும் 9 முறை பாகிஸ்தான் அணியும் வெற்றிபெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

முன்னதாக, ரி-20 உலகக்கிண்ணத் தொடருக்கு முன்னோட்டத் தொடராக நடைபெற்ற இரு அணிகளுக்கிடையிலான ஏழு போட்டிகள் கொண்ட தொடரை, இங்கிலாந்து அணி 4-3 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.

இந்த தொடரின் போது, இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்களான, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பங்கேற்றிருக்கவில்லை. இந்த அணியை மொயின் அலி வழிநடத்தியிருந்தார்.

தற்போது கடந்த தொடரை வென்ற அதே உத்வேகத்துடன் பாகிஸ்தான் அணியை, இங்கிலாந்து அணி நாளை எதிர்கொள்ளவுள்ளது.
30 ஆண்டுகளுக்கு பிறகு மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. கடந்த 1992ஆம் ஆண்டு, இதே மைதானத்தில் 50 ஓவர்கள் உலகக்கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி, சம்பியன் பட்டம் வென்றிருந்தது.

ரி-20 உலகக்கிண்ணத் தொடரைப் பொறுத்தவரை இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளு; இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது மூன்றாவது முறையாகும்.

கடந்த 2010ஆம் ஆண்டு போல் கொலிங்வுட் தலைமையிலான இங்கிலாந்து அணி, அவுஸ்ரேலியாவை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது.

இதனைத்தொடர்ந்து 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி, மேற்கிந்திய தீவுகள் அணியிடம் சம்பியன் கிண்ணத்தை பறிகொடுத்திருந்தது.

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை, முதல் தொடரிலேயே இந்தியாவிடம் தோல்வியடைந்து சம்பியன் கிண்ணத்தை இழந்தது.

இதனைத்தொடர்ந்து, 2009ஆம் ஆண்டு இலங்கை அணியை வீழ்த்தி பாகிஸ்தான் முதல் சம்பியன் கிண்ணத்தை வென்றது.

இதுவரை நடைபெற்றுள்ள எட்டு ரி-20 உலகக்கிண்ணத் தொடரை பொறுத்தவரை 2007ஆம் ஆண்டு இந்தியா, 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான், 2010ஆம் ஆண்டு இங்கிலாந்து, 2012ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள், 2014ஆம் ஆண்டு இலங்கை, 2016ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள், 2021ஆம் ஆண்டு அவுஸ்ரேலியா ஆகிய அணிகள் சம்பியன் கிண்ணங்களை வென்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *