மெக்சிகோவின் புதிய தூதுவர் ஃபெடரிகோ சலாஸ் நேற்றைய தினம் (11.11.2022) கொழும்பில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்திருந்தார்.
பிரதமருக்கும் மெக்சிகோவின் புதிய தூதுவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது, மெக்சிகோவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக மற்றும் கல்வி ஒத்துழைப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
தற்போது இலங்கையில் உள்ள இளைஞர்கள் வெளிநாட்டு மொழிகளை கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் ஸ்பானிய மொழித் துறைகளை நிறுவுவதற்கு ஆதரவளிக்குமாறு மெக்சிகோ தூதுவரிடம் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
மெக்சிகன் முதலீட்டாளர்கள் இலவங்கப்பட்டை மற்றும் பிற மசாலாப் பொருட்களுக்கான ஏற்றுமதிப் பொருட்களுக்கு மதிப்பு சேர்க்கும் வகையில் புதிய முதலீடுகளை உள் சேர்க்க வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.
லத்தீன் அமெரிக்க சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சுற்றுலாத் துறையை விரிவுபடுத்துவதற்கு இலங்கைக்கு பெரும் ஆற்றல் இருப்பதாக மெக்சிகோவின் புதிய தூதுவர் இங்கு குறிப்பிட்டார்.
கல்வித் துறையில் நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சுடன் மேலதிக கலந்துரையாடல்களை நடத்துவதற்கு அவர் இணங்கியதோடு. வட அமெரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க சந்தைகளுக்குள் பிரவேசிப்பதற்கு இலங்கையின் கேந்திர நிலையமாக மெக்சிகோ பயன்படுத்தப்பட வேண்டுமென தூதுவர் சுட்டிக்காட்டினார்.
இக்கலந்துரையாடலில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் மெக்சிகோ தூதரக அரசியல் ஆலோசகர் கில்லர்மோ சாவேஸ் கொனிஜோ ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.