மகனின் விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி – சாந்தனின் தாய் நெகிழ்ச்சி

தமது மகனின் விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக, இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சாந்தனின் தாய் தெரிவித்துள்ளார்.

21 வயதில் தன்னை விட்டு பிரிந்த தனது மகனுடன், 53 வயதில் சேரும் காலம் வந்துள்ளதாக, யாழ்ப்பாணம் உடுப்பிட்டியைச் சேர்ந்த சாந்தன் என அறியப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராசாவின் தாய் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தண்டனை அனுபவித்து வந்த எஞ்சிய ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டமைக்கு இந்திய காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நீண்ட காலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த, நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரையும் விடுதலை செய்து இந்திய உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவந்த கைதிகளை விடுவிக்கும் உயர்நீதிமன்றின் உத்தரவு முற்றிலும் ஏற்க முடியாதது என அவர் தெரிவித்துள்ளது.

முற்றிலும் தவறான இந்தத் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி தெளிவாக ஆட்சேபிக்கின்றது.

முற்றிலும் ஏற்க முடியாத விடயம் என்று கருதுகிறது.

இந்தப் பிரச்சினையில், இந்தியாவின் மனநிலைக்கு ஏற்ப உயர்நீதிமன்றம் செயல்படாதது மிகவும் துரதிஷ்டவசமானது என இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *