4 வயதுச் சிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கிய தந்தையை யாழ்ப்பாணம் மாநகர பகுதியில் வைத்து இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
4 வயதுச் சிறுமி மூர்க்கத்தனமாக தாக்கப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக வெளியாகியது.
தாக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயாரும் வீட்டிலிருந்து வெளியேறி யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் கடந்த திங்கட்கிழமை இருந்துள்ளனர்.
அந்தப் பகுதியினால் பயணித்த குடும்பநல உத்தியோகத்தர் ஒருவர் அந்த சிறுமியை இனங்கண்டு விசாரித்துள்ளார். தாம் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்புத் தேடுவதாக தாயார் கூறியதையடுத்து அவர்களை மீட்டு வடமாகாண சிறுவர் பராமரிப்பு திணைகளத்திடம் குடும்பநல உத்தயோகத்தர் ஒப்படைத்திருந்தார்.
சிறுமி அவரது தந்தையினால் தாக்கப்படும் காணொலி பதிவே சமூக ஊடகங்களில் வெளியாகியதை கண்டறிந்த வடமாகாண சிறுவர் பராமரிப்பு திணைக்கள அதிகாரிகள் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிவித்திருந்தனர்.
ஊர்காவற்றுறை சுருவில் பகுதியில் சிறுமியின் தந்தையை தேடிய போதும் அவர் தலைமறைவாகி உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை யாழ்ப்பாணம் மாநகர பகுதியில் வைத்து சிறுமியைத் தாக்கிய தந்தை ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். அவரை விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
“தாயாருடன் ஏற்பட்ட முரண்பாட்டில் மகளைத் தாக்கினேன். அதனை அலைபேசியில் காணொளி எடுத்தேன். அந்த காணொளி மனைவியின் அலைபேசியிலிருந்து அவரது நண்பிக்கு சென்றுவிட்டது. அதுவே வெளியாகிவிட்டது” என்று சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.