தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டிசம்பரில் அழைக்கும் கூட்டத்தில் வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்துக்குச் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பியின் தலைமையில் அவரது வீட்டில் கூடிய கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழு தீர்மானித்தது.
நீண்ட நாட்களின் பின்னர் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு சம்பந்தன் தலைமையில் நேற்று (23) மாலை கூடியது. கூட்டம் சுமுகமாகவும் இணக்கமாகவும் நடைபெற்றது எனக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களோடு (24) மாலை சம்பந்தனின் இல்லத்தில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கூட்டமைப்பு எம்.பிக்கள் யாவரும் பங்குபற்ற அழைக்கப்படுவார்கள் என்று நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தீர்வு முயற்சிகளுக்கான பேச்சு தொடர்பாக இப்போது ஏற்பட்டுள்ள களச் சூழல் குறித்து நேற்றைய கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது என்றும் தெரியவந்தது.
தீர்வுப் பேச்சு முயற்சியில் ஆரம்பத்தில் வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்துக்கு சமஷ்டி தீர்வு என்ற அதிகாரப் பகிர்வு விடயத்தை ஒன்றுபட்டு நின்று வலியுறுத்துவது எனவும், பின்னர் நிலைமைகளுக்கு ஏற்ப விடயங்களைக் கூடிக் கதைத்துப் பரிசீலித்து தீர்மானங்களை எடுப்பது என்றும் நேற்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்று அதில் பங்குபற்றிய எம்.பி. ஒருவர் தெரிவித்தார்.