நியாயத்திற்காக போராடிய தலைவனை கோழைத்தனமாக தோற்கடித்தது யார்? சபா குகதாஸ் கேள்வி

பேச்சுவார்த்தைக்கு அழைத்து பலவீனப்படுத்தி நியாயத்திற்கு போராடிய தலைவனை கோழைத்தனமாக தோற்கடித்தது யார்? தலைவர் மீது குற்றம் சாட்டும் தரப்புக்கள் கூறுங்கள் என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொள்கையில் கடும் போக்காக இருந்தார் அரசியலில் இறங்கி வர தவறினார் என்ற சிலரின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், தமிழீழம் தான் இறுதி இலக்கு என்ற கோட்பாட்டு அடிப்படையில் ஆயுதப் போராட்டத்தை தலைவர் பிரபாகரன் வழி நடாத்தினாலும் அவர் தொடர்ந்து சொன்ன ஒரு விடயம் ‘போராட்ட வடிவங்கள் மாறலாம் இலக்கு ஒன்றுதான்’ இதனை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிரூபித்தும் காட்டினார்.

போராட்ட வடிவங்களில் ஒன்று இந்திய – இலங்கை ஒப்பந்தம் வந்தபோது ஆயுதங்களை ஒப்படைத்தமை, இரண்டாவது தியாகி தீலீபனின் உண்ணாவிரதப் போராட்டம். ஐந்து அம்சக் கோரிக்கைக்கு என்ன நடந்தது உலகிற்கே தெரியும். மூன்றாவது சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு ஒன்றல்ல ஐந்து தடவைகள் கீழ் இறங்கி வந்தமை.

இறுதியாக, 2002ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அதே ஆண்டு நவம்பர் மாத மாவீரர் தின உரையில் ஐக்கிய இலங்கைக்குள் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தங்களுக்கான அரசியல் தீர்வை தாருங்கள் அதனை நீங்கள் மறுத்தால் நாங்கள் வெளியக சுயநிர்ணய அடிப்படையில் தனி நாடு கோருவதை தவிர வேறு வழி இல்லை எனவும், மிக தீர்க்க தரிசனமாக இலங்கை அரசாங்கத்தை நோக்கி அன்றைய அரச தலைவர்களான சந்திரிக்க, ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஐபக்ச, சஐpத் பிரேமதாஸ போன்றோருக்கும் சர்வதேசத்தில் இந்தியா, அமெரிக்கா, நேர்வே உள்ளிட்ட ஐரோப்பிய ஆசிய நாடுகளை நோக்கியும் கோரிக்கை வைத்தார்.

ஆனால், என்ன நடந்தது, பேச்சுவார்த்தைக்கு அழைத்து பலவீனப்படுத்தி நியாயத்திற்கு போராடிய தலைவனை கோழைத்தனமாக தோற்கடித்தது யார்? தலைவர் மீது குற்றம் சாட்டும் தரப்புக்கள் கூறுங்கள்? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

சம்பிக்க ரணவக்க இன்று கிளிநொச்சி விஜயம்!

Leave a Reply