கரையோர பாதுகாப்புத் திணைக்களம் எப்போது வந்ததோ அன்றிலிருந்து நாங்கள் கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்! நா.வர்ணகுலசிங்கம் (வீடியோ இணைப்பு)

கரையோர பாதுகாப்புத் திணைக்களம் எப்போது வந்ததோ அன்றிலிருந்து நாங்கள் கேவலமான நிலைக்குத் த ள்ளப்பட்டிருக்கின்றோம் என்றும், இழுவைப் படகுகள் பிரச்சினைக்கு கடற்றொழில் அமைச்சர் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும் வடமராட்சி – வடக்குகிழக்கு கூட்டுறவு சங்க சமாசனங்களின் தலைவரும், யாழ். மாவட்ட கிழக்கு கூட்டுறவு சங்க சமாசனங்களின் சங்கத்தின் உப தலைவருமான நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

அண்மைக் காலங்களில் எமது கடற்பரப்பில் சடலங்கள் கரை ஒதுங்குவதால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் மீனவர் ஒருவருடைய வலையில் சடலம் ஒன்று சிக்கிய நிலையில், அதை கரைக்கு கொண்டு வரமுயற்சித்தபோது அழுகி உருக்குலைந்த நிலையில் இருந்ததால் மீனவர் அவரது வலையை வெட்டி, மீதி வலையை எடுத்து சென்றிருக்கிறார்.

இந்த நிலையில், மக்கள் கடற்றொழிலுக்கு செல்வதற்கு மிகவும் பயப்படுகின்றார்கள். அவர்கள் இன்னும் தொழிலுக்கு செல்லாது அச்சத்தில் உள்ளனர். ஆகவே, இதற்கு அரசாங்கம் ஒரு தீர்வை வழங்க வேண்டும்.

மேலும், கடற்பெருக்கு அதிகரித்ததால் கடல் வெள்ளம் அடித்து படகு இழுக்க முடியாத நிலையில் வெள்ளம் பெருகி நிற்கின்றது. ஆனால், இதற்குரிய நடவடிக்கை எடுக்காது கரையோர பாதுகாப்புத் திணைக்களம் கண்ணை மூடிக் கொண்டிருக்கின்றது.

வான் முழுதும் கற்கள் உள்ளதால், படகுகள் தொழிலுக்கு செல்ல முடியாது உள்ளது. இதில் தொழிலுக்கு சென்ற 13 படகுகளின் இயந்திரங்கள் கீழ் வால் பகுதிகளில் அடித்துடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

அந்த வான்களை தூர்வாரக் கூட எங்களால் முடியவில்லை. ஏனினெல் கரையோராப் பாதுகாப்புத் திணைக்களத்தில் அனுமதி கிடைக்கவில்லை. அதற்காக அனுமதியை பெற கொழும்புக்கு செல்ல வேண்டும் என குறித்த திணைக்களத்தினர் தெரிவிக்கின்றனர்.

எங்கள் மக்கள் மற்றும் சங்கங்கள் சொந்தப் பணத்தில் அணைகட்டி, எங்கள் பாதுகாப்பை தேடுவதற்கு முயற்சித்தால் அதற்குக் கூட குறித்த திணைக்களம் இடைஞ்சலாக இருக்கின்றது.

இதனை செய்ய விடாது தடுப்பதற்கு திணைக்களத்திற்கு உரிமை உள்ளதென்றால், அணைகளைக் கட்டுவதற்கு ஏன் எங்களுக்கு அதிகாரம் இல்லை.

கொழும்புக்குச் சென்று தான் அனுமதி பெறப்பட வேண்டும் என்றால், ஏன் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் யாழ்ப்பாணத்தில் உள்ளது.

இத் திணைக்களம் எங்களுக்கு எந்தவிதமான சாதகமாக நடவடிக்கைகளையும் செய்து தரவில்லை. இந்தக் கரையோர பாதுகாப்புத் திணைக்களம் இல்லாமல் இருப்பதே எங்களுக்கு பிரச்சினை இல்லை. கரையோரத் திணைக்களம் எப்போது வந்ததோ அன்றிலிருந்து நாங்கள் கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

இதற்குரிய அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுத்து கடல் அணைகளைக் கட்டுவதற்கும், வான்களை புனரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

இத்துடன், இந்திய இழுவைப் படகு திரும்பவும் அத்துமீறி நுழைந்து மாதல் – மயிலிட்டியில் எமது மீனவர்களின் வலைகள், தொழில் உபகரணங்கள் எல்லாவற்றை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதுதொடர்பில் கடற்றொழில் அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், உள்ளூர் இழுவைப் படகு, அதாவது, வல்வெட்டுத்துறை இழுவைப் படகு பலாலி, காங்கேசன்துறை, கீரிமலைப் பகுதிகளில் 30 கிலோமீற்றர் தூரத்தில் வந்து, எங்களது வலைகளையும், கடல் வளத்தையும் அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் எங்கள் மீனவர்கள் முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைப் பார்வையிடவோ, தீர்த்து வைக்கவோ எவரும் வரவில்லை. அனைவரும் பார்வையாளராக இருக்கின்றார்களே தவிர இப்பிரச்சினையை தீர்க்க எவரும் தயாரில்லை.

ஏனினென்றால் அவர்கள் கையெழுத்து வைத்தால் சம்பளம், ஆனால், கடலில் இறப்பது எங்கள் மக்களும், நாங்களும் தான். இன்று மக்களின் வாழ்வாதாரமும் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

எனவே, இதனை உடனடியாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் கவனத்தில் எடுத்து இதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

https://we.tl/t-K5Ohc4kIMq

Leave a Reply