சுற்றறிக்கை ரத்து – இலங்கை ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

கொரோனா தொற்று நோய் பரவலை அடுத்து அரச சேவையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இலகுவான ஆடைத்திட்ட சுற்றறிக்கை ரத்துச் செய்யப்படவுள்ளதாக நாடாளுமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் அரச சேவைகளின் நலன் கருதி, இலகு ஆடைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும் இந்த சுற்றறிக்கையின்படி, பாடசாலைகளின் ஆசிரியைகள் இலகு ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு வருகைத் தந்தமையானது சமூகத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்தநிலையில் சேலைகளை தவிர்த்து, இலகுவான ஆடைகளை ஆசிரியைகள் அணிந்து பாடசாலைகளுக்கு செல்கின்றமை தொடர்பில் பேஸ்புக் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்த, தவறான கருத்து ஒன்று தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினிகுமாரி, இன்று நாடாளுமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இதன்போது அவர், ஆசிரியைகளுக்கு சீருடைகளுக்கான கொடுப்பனகளை வழங்குவது தொடர்பாக அரசாங்கம் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என்றும் யோசனை ஒன்றை முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்த கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, சமூக ஊடகங்களில் ஆசிரியர்களின் இலகு ஆடைகள் தொடர்பில் பகிரப்பட்ட கருத்து தொடர்பில், குற்றப்புலனாய்வுத்துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்போவதாக குறிப்பிட்டார்.

எனினும் ஆசிரியர் சீருடைகளுக்கான கொடுப்பனவுகளை இந்த தருணத்தில் முன்னெடுக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

இதற்கான மாற்று திட்டம் தொடர்பில் தாம் ஆராய்ந்து வருவதாகவும் அதனை விரைவில் நாடாளுமன்றில் அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம் 2019 ஆம் ஆண்டு ஆடைகள் தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாக அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரத்துச்செய்வார் என்றும் கல்வி அமைச்சர் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *