இலங்கையில் பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் என்ற மதங்களுக்கு அப்பால், விளையாட்டுத்துறையே ஐந்தாவது மதமாகும் என்று தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த மதத்தைக் கொண்டு, இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணிகளில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் தவிர்ந்த வீரர்கள் உள்ளடக்கப்படவில்லை.
இது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய மனத்தாங்கலை ஏற்படுத்தியுள்ளது என்று மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளின் தேசிய அணிகளைப் பார்க்கும் போது, அங்குள்ள தேசிய விளையாட்டு அணிகளில் கறுப்பினத்தவர்கள் அதிகளவில் இருக்கின்றனர் என்பதை அவதானிக்கமுடிகிறது.
இது அந்த நாடுகளின் ஒற்றுமை மற்றும் இனநல்லிணக்கத்தை எடுத்துக்காட்டுகிறது என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.
எனவே இளம் அமைச்சரான விளையாட்டுத்துறை அமைச்சர், இதனை சவாலாக எடுத்து, தேசிய அணிகளில் அனைத்து இனத்தவர்களும் பங்கேற்கும் நிலையை உருவாக்க வேண்டும் என்றும் மனோ கணேசன் கேட்டுக்கொண்டார்.