தமிழர்களின் ஆயுத போராட்டம் மௌனித்ததே தவிர போராட்டம் நிறுத்தப்படவில்லை- சிவாஜிலிங்கம் ஆவேசம்!

இன்றைய தினம் தலைவர் பிரபாகரனின் 68வது அகவை தினம் ஆகும் . இந்த அகவை தினத்தினை ஈழத்தமிழர்  தமிழீழ எழுச்சி நாளாக கொண்டாடி வருகின்ற சூழ்நிலையிலே நாங்கள் ஒரு விடயத்தினை கூற விரும்புகிறோம்.

இன்றைய தினம் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் சிறுவயதில் இருந்து வாழ்ந்த இல்லத்திற்கு முன்னாள் 68 எள்ளுப்பாகுகளை வழங்கியிருந்தோம்.அதேபோல் இனிப்புக்களும் வழங்கப்பட்டன.வெடிகள் கொளுத்தப்பட்டன.அந்த இடத்தில் உறுதி மொழியினையும் மேற்கொண்டிருந்தோம் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வல்வெட்டித்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுதந்திர தமிழீழம் கிடைக்க வேண்டும் என்ற  நோக்கத்திற்காக  போராடிக்கொண்டிருந்தார்களோ அந்த போராட்டம் ஆயுத போராட்டமாக மௌனித்ததே தவிர போராட்டம் நிறுத்தப்படவில்லை ,இந்த சூழ்நிலையின் பின்னணியில் ,ஈழத் தமிழீழம் ஒரு போதும் அரைகுறை தீர்வுகளுக்கு இணங்கப்போவதில்லை என்று சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஒரு சுதந்திரத்துக்கான ஒரு பொதுசன வாக்கெடுப்பு ,ஐக்கிய நாடுகள் சபையினால் அல்லது சர்வதேச சமூகத்தினால் வடக்கு,கிழக்கு மாநிலத்தில் ,புலம்பெயர் தமிழர்கள் உட்பட அந்த வாக்கெடுப்பில் சுதந்திர தமிழீழம் வேண்டுமா?இல்லையென்றால் என்ன?என்ற கேள்வியினை கேட்டு ஒரு சுயநிர்ணய அடிப்படையில் தலைவிதியை தீர்மானிக்கின்ற  பொதுசன வாக்கெடுப்பினை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையினை நோக்கி நாங்கள் பயணிக்க வேண்டும் என்பது முக்கிய விடயம்.

சிங்களவர்களுக்கு கிடைத்த 75 ஆவது சுதந்திர நாளினை அவர்கள் கொண்டாட இருக்கின்ற நேரத்திலே அதுக்கிடையில் ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார்.வருட கணக்கிலே தீர்க்க முடியாத பிரச்சனைக்கு 2 மாதங்களிற்குள்ளே தீர்வு என்பது  வெறும் பித்தலாட்டமாக அமைகிறதே தவிர வேறெதுவும் இல்லை.

இந்த சூழ்ச்சி வலையில் தமிழ் கட்சிகள் ,தமிழ் இனம் ஏமாந்து போக கூடாது என்பதனை தான் இந்த இடத்தில் கூற வேண்டும் .நாளைய தினம் அனுஷ்ட்டிக்கப்பட இருக்கின்ற மாவீரர் நாள் நிகழ்ச்சியிலே ஒரு உறுதிமொழியினை ஏற்க வேண்டும். 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்கள்,தங்களின் இன்னுயிர்களை சுதந்திர தமிழ் ஈழத்திற்காக தியாகம் செய்தார்களோ அந்த இலட்சியத்தை வலியுறுத்தக்கூடிய விதத்தில் சுதந்திரத்துக்கான ஒரு பொதுசன வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.என்பதனை சர்வதேச சமூகத்துக்கு கூற வேண்டும் என்று நாங்கள் தமிழீழம் சொந்தங்கள் அனைவரையும் ,தமிழகத்தில் உள்ள தமிழர்களையும்,புலம்பெயர் தமிழர்களையும் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *