ஹாமில்டன், நவ 27
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் ஆக்லாந்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி முந்தைய ஆட்டத்தில் 306 ரன்கள் குவித்தாலும் நியூசிலாந்து அணி 17 பந்துகள் மீதம் வைத்து இலக்கை எளிதாக எட்டிப்பிடித்தது. டாம் லாதம் (145 ரன்கள்), கேப்டன் கேன் வில்லியம்சன் (94 ரன்கள்) ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்து சாதனை படைத்ததுடன் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.
இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க வேண்டியது வரும் என்பதால் முந்தைய ஆட்டத்தில் பந்து வீச்சில் இருந்த பலவீனத்தை சரிசெய்வதுடன் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட புதிய யுக்தியுடன் இந்திய அணி களம் இறங்கும். ஒருநாள் போட்டியில் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக உள்ளது. அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை இழக்காமல் இருக்க இந்திய அணி எல்லா வகையிலும் வரிந்துகட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஹாமில்டன் ஷெட்டான் பார்க் மைதானம் பேட்டிங்குக்கு அனுகூலமானதாகும். ஆனால் ஹாமில்டனில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்று அங்குள்ள வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.