குஜராத் தேர்தல் பணி: சக துணை ராணுவ வீரர் துப்பாக்கி சூடு; 2 வீரர்கள் உயிரிழப்பு

போர்பந்தர், நவ 27

குஜராத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தீவிர ஓட்டு வேட்டை நடந்து வருகிறது.

தேர்தலில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இதில், போர்பந்தர் நகரில் துக்டா கோசா பகுதியில் உள்ள புயல் நிவாரண முகாம் ஒன்றில் இந்திய ரிசர்வ் பட்டாலியனை சேர்ந்த துணை ராணுவ வீரர்கள் தங்கியிருந்தனர். அவர்களில் ஒருவர், சக வீரர்கள் மீது நேற்றிரவு திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார்.

இந்த சம்பவத்தில், 2 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். 2 வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு போர்பந்தர் நகர மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அதன்பின்பு ஜாம்நகர் மருத்துவ கல்லூரிக்கு உயர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் மணிப்பூரை சேர்ந்தவர்கள். இதனை தொடர்ந்து கூடுதல் படையினர் சம்பவ பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர். நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது என மாவட்ட மாஜிஸ்திரேட் அசோக் சர்மா கூறியுள்ளார். துப்பாக்கி சூடு நடந்ததற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *