ஐஸ் உள்ளிட்ட நச்சு போதைப் பொருள்களுக்கு, மாணவர்கள் அடிமையாவதை தடுப்பதற்கு கொழும்பை மையமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட முன்னோடி வேலைத்திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் இந்த திட்டத்தை அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் உட்செல்வதை தவிர்க்கும் நோக்கில், பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் பல வேலைத்திட்டங்கள் கொழும்பை மையமாக கொண்டு அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
அந்த திட்டத்தின் சாதக, பாதகங்கள் குறித்து தற்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றது.
இதன் முன்னேற்றங்களை ஆராய்ந்து நாடு முழுவதிலும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.