தமது கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்து 176 விசேட மருத்துவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
இருதயவியல் அறுவை சிகிச்சை, புற்றுநோயியல், நரம்பியல், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், இரத்தக்கசிவு, கண் மருத்துவம், அனஸ்தீசியா, குழந்தை நல மருத்துவம் உள்ளிட்ட மருத்துவத்தின் பல்வேறு துறைகளில் சிறப்பு ஆலோசகர்களாகவுள்ள விசேட மருத்துவர்களே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோரடங்கிய ஆயம் முன் இன்று அழைக்கப்பட்டது.
அதன்போது, குறித்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள அமைச்சரவை, சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினருக்கு, எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, 17-10-2022 திகதியிடப்பட்ட அமைச்சரவையின் தீர்மானத்தை மனுதாரர்களான, வைத்திய நிபுணர்கள் சவால் செய்துள்ளதாகவும், இந்த தீர்மானம் சட்டவிரோதமானதாகவும், தமது நியாயமான எதிர்பார்ப்பை முழுமையாக மீறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, குறைந்தது 63 வயது வரை சேவையில் தொடர வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.