
வடக்கு கிழக்கிலே துயிலும் இல்லங்கள் கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டு அங்கு படை முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு ஆக்கிரமித்து வைத்திருப்பது அவர்களுக்கோ அவர்களது உறவினர்களுக்கோ அவ்வளவு நல்லதல்ல என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
கொடிகாமம் பகுதியிலுள்ள படை முகாமுக்கு முன்னால் மாவீரர் தின நினைவேந்தலில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், வடகிழக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் அரச படையினர் உடைத்து சேதப்படுத்தினார்கள். துயிலும் இல்லங்களை ஆக்கிரமித்து படை முகாம்களையும் அமைத்துள்ளனர்.
உலகிலே ஒரு நாடு எதிரி நாடுகளுக்குள் ஆக்கிரமிப்பு செய்யும்போது கூட அந்த நாட்டில் உள்ள கல்லறைகளை சேதப்படுத்தாது. ஆனால் இங்கு அதனை மீறி துயிலும் இல்லங்கள் கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டு அங்கு படை முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் இராணுவ வீரர்களுக்கு அச்ச உணர்வு, சுகவீனம் ஏற்பட்டிருப்பதாக அவர்களது உறவினர்கள் மூலம் அறிந்திருக்கிறோம். இவ்வாறு ஆக்கிரமித்து வைத்திருப்பது அவர்களுக்கோ அவர்களது உறவினர்களுக்கோ அவ்வளவு நல்லதல்ல.
பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளும் யாழ்ப்பாண மாவட்டத்தில் தூயிலும் இல்லங்களை மூடி அமைக்கப்பட்ட கோப்பாய்,கொடிகாமம்,எள்ளங்குளம் பகுதி படை முகாம்களுக்கு முன்னால் நாம் நினைவேந்தலை மேற்கொண்டு இருக்கின்றோம் – என்றார்.