தம்மீது நாடாளுமன்றில் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் நிரூபித்தால் தாம் பதவி விலக தயாராகவுள்ளதாக கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட 3 ஏக்கர் காணியை கொட்டகலை பிரதேச சபை விற்பனை செய்ய முயற்சிப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் குற்றஞ்சாட்டியிருந்தார்.
நாடாளுமன்றில் கருத்துரைத்த போது இதனைக் குறிப்பிட்ட அவர், அபிவிருத்தி என்ற போர்வையில் இவ்வாறான ஊழல் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்து கருத்துரைத்துள்ள, கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் ராஜமணி பிரசாந்த், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தம்மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்துரைத்த கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் ராஜமணி பிரசாந்த், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் 1 ஏக்கர் காணி மாத்திரமே வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் பிரதேச சபை தவிசாளராக இருந்த சந்தர்ப்பத்திலே பல ஊழல் சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.