நாட்டில் தற்போது நிலவும் மருந்துப் பற்றாக்குறையை அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் முடிவுக்கு கொண்டு வர முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜே.எஸ்.சந்திரகுப்தா, மருந்துப் பொருட்கள் பற்றாக்குறைக்கு பல காரணங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம், சட்டப்பூர்வமாக்கப்பட்ட மருந்துகள் கூட்டுத்தாபனம், சட்டப்பூர்வமாக்கப்பட்ட மருந்துப் பொருட்கள் கூட்டுத்தாபனம் மற்றும் மருத்துவ விநியோகப் பிரிவு மற்றும் பல நிறுவனங்கள் இணைந்து நாட்டிற்கு தேவையான மருந்துகளை வழங்குவதற்கும் விநியோகிப்பதற்கும் பணிபுரிந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பற்றாக்குறையாக இருந்த சில மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்ட போதிலும், முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகளை பெற்றுக்கொள்ள மூன்று அல்லது நான்கு மாதங்களாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த வருடம் மருந்து விநியோகத்திற்காக 73 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அது 2023 ஆம் ஆண்டிற்கான வரவு -செலவுத் திட்டம் மூலம் 110 பில்லியன் ரூபா. அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேவையான மருந்துகளில் 20 வீதமானவை தற்போது உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகவும் அதனை 40 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.