யாழ்ப்பாணம் மானிப்பாய் காரைநகர் பிரதான வீதிகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி சங்கானை மற்றும் மூளாயில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்திலிருந்து காரைநகருக்கு செல்லும் பிரதான வீதிகளான 786 மற்றும் 782 பேருந்து வழித்தட வீதிகள் கடந்த பல ஆண்டுகளாக குன்றும் குழியுமாக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
இந்நிலையில் மழைகாலங்களில் குறித்த வீதியினை பயன்படுத்துவோர் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக மழைகாலங்களில் குறித்த வீதிகளிலுள்ள பள்ளங்களில் மழைநீர் மூடிக் காணப்படுவதால் அவ் வீதியூடாக பயணிப்போர் குறித்த பள்ளங்களில் விழுந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் சேதமடைந்துள்ள குறித்த வீதிகளினை நிரந்தரமாக புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் அதேவேளை மழை காலத்துக்கு முன்பதாக குறித்த வீதியினை தற்காலிகமாகவேனும் புனரமைப்புச் செய்யுமாறு கோரியும் குறித்த வீதிமறியல் போராட்டம் இடம்பெற்றது.
இந்த போராட்டத்தில் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நடனேந்திரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், சங்கானை பட்டின அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.





