மே 9 ஆம் திகதி கோட்டா கோ கம போராட்டத் தளத்தின் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ள மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொறுப்பாளர் தேசபந்து தென்னகோனை சந்தேக நபராகப் பெயரிட்டு கைது செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை மக்கள் போராட்டத்தின் ஆதரவாளரான வழக்கறிஞர் ராமலிங்கம் ரஞ்சன் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கின் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோனை சந்தேக நபராக பெயரிடுவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் போதிய சாட்சியங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் கோரியுள்ளார்.
இவ்வாறான சூழல்கள் இருந்தும், பிரதிவாதிகள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோனுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கத் தவறியுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை தடுத்து வைத்து விசாரிக்குமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தேசிய பொலிஸ் பேரவைக்கு அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.