ஜனவரி மாதம் முதல் முட்டை விலை குறைவடையும்

ஜனவரி மாதம் முதல் முட்டை விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பண்டிகை காலத்திற்கு தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு முட்டை விநியோகிக்கப்படும்.

பண்டிகைக் காலம் முடியும் வரை முட்டையின் சில்லறை விலையை 55 ரூபாவாக வழங்குமாறும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதால், ஜனவரி – பெப்ரவரி மாதத்திற்குள் 50 ரூபாய்க்கு கீழ் முட்டையின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் முட்டை உற்பத்தி துறையின் சரிவு 2019 இல் இருந்தே ஆரம்பமாகிவிட்டது. ஈஸ்டர் தாக்குதலுடன், வணிகம் சுமார் 25 சதவீதம் சரிந்தது. பின்னர் கோவிட் தொற்றுநோய் மற்றும் எரிசக்தி காரணமாக இந்தத் துறை மேலும் சரிந்தது.

இந்நாட்டின் நாளாந்த முட்டைத் தேவை 65 இலட்சம் ஆகும். ஆனால் நாளாந்த முட்டை உற்பத்தி 40 இலட்சம் மாத்திரமே.

முட்டை உற்பத்தியாளர்கள் சகல செலவினங்களையும் ஏற்று முட்டை ஒன்றின் விலை 55 ரூபாவாக கோருகின்றனர். ஆனால் எமது சங்கத்தை அழைக்காமல், அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாய் என நிர்ணயம் செய்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

முட்டை உற்பத்தி செலவு குறித்து வர்த்தக அமைச்சகத்துக்கு எந்த புரிதலும் இல்லை. அந்த வர்த்தமானியால் முட்டை தொழில்துறை இலங்கையில் பெருமளவில் சரிந்துள்ளது.

கொழும்பு வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய எமது சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதனை அரசியல் ரீதியாக சரிசெய்ய முடியாத காரணத்தினால் நீதிமன்றத்திற்கு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்

Leave a Reply