திருகோணமலை வைத்தியசாலையில் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த பெண் பணியாளரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன.
திருகோணமலை வைத்தியசாலையில் துப்புரவுப் பணியாளராகக் கடமையாற்றும், 36 வயதுடைய சதீஸ் ரேகா எனும் இளம் ஊழியர், மன அழுத்தம் அதிகரித்து மூளையிலுள்ள இரத்தக்குழாயில் வெடிப்பு ஏற்பட்டு நேற்று மூளைச்சாவடைந்துள்ளார்.
மேலதிகாரியிடம் விடுமுறை கேட்டதற்கு அவர் அனுமதி வழங்காததோடு, கடும் வார்த்தைப் பிரயோகமும் பிரயோகித்துள்ளார்.
குறித்த பெண் பணியாளர், இதனை தாங்க இயலாமல் மன அழுத்தம் ஏற்பட்டு மூளைச் சாவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உயிரிழந்த பெண்ணின் வேண்டுகோளுக்கு அமைய அவரது உறவினர்கள் பெண்ணின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பெண்ணுக்கு இரு பிள்ளைகள் இருப்பதாகவும் கணவர் விபத்தில் இறந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.






