தமிழர் தரப்பில் பொறிமுறை; தீர்வைக் கையாள அவசியம்! வலியுறுத்தும் ரெலோ அமைப்பு

“சமஷ்டி முறைதான் எமது அரசியல் தீர்வு என்பதில் தமிழ்த் தேசியத் தரப்பினரிடம் தெளிவும் உறுதியும் உள்ளன. ஆனால், அதை அடையும் வழியும் பொறிமுறையும் எம்மிடம் இல்லை. அதை வகுப்பது மிக அவசியம். தென்னிலங்கை தலைவர்கள் அழைக்கும் போதெல்லாம் நாம் சென்று பேசுவதால் மாத்திரம் எமது அரசியல் தீர்வு சாத்தியமாகாது. இப்படியே பயணிப்பதால் அரசியல் இலட்சியங்களை நாங்கள் அடைய முடியாது.  அதை அடைவதற்கான பொறிமுறையே எமது தீர்வை சாத்தியமாக்கும்.” – இவ்வாறு ரெலோவின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:-

“நிரந்தரமான அரசியல் தீர்வுக்காக தமிழர்கள் பல காலமாக வெவ்வேறு வழிகளில்  போராடி வருகின்றோம்.  மாறி வரும் அரசுகளோடு பேச்சு நடத்தி வந்திருக்கின்றோம். அதன்பின் ஏற்படுகின்ற அரசியல் குழப்பங்கள்  காரணமாக பேச்சுகள்  பயனளிப்பதில்லை.  அல்லது இறுதிக் கட்டத்தில் குழம்பி விடுகின்றன.  இதற்கு காரணமாக அரசியல் மாற்றங்களை அமைந்திருக்கின்றன.  பிராந்திய அரசியலில்  ஏற்படும் மாற்றங்கள்,  உள்ளக அரசியலில் – குறிப்பாக  தென்னிலங்கையில் – ஏற்படும் மாற்றங்கள் அதே போன்று தமிழர் தரப்பில் ஏற்படுகின்ற  மாற்றங்கள் என்று வகைப்படுத்தலாம்.  

சந்திரிகா அம்மையார் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட  அரசியல் தீர்வு இறுதியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் காரணமாக  நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதோடு முடிவுக்கு வந்தது.  அதன் தொடர்ச்சியாக ரணில் விக்கிரமசிங்க விடுதலைப்புலிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பேச்சுகள் ஆரம்பிக்கப்பட்டன.  முக்கியமாக சர்வதேச நாடுகள் இதற்கு ஆதரவை வழங்கியிருந்தன.  

அதன் பின்னர்  தமிழ் அரசியலில் பேரம் பேசும் சக்தி மெளனிக்கப்பட்டு ஏற்பட்ட மாற்றங்களால் இந்த முயற்சியை தொடர முடியவில்லை.

நல்லாட்சி அரசில் அரசியல் யாப்பு மாற்றத்தையே தோற்றுவித்து இறுதிச் சுற்று வரை சென்ற அரசியல் தீர்வு  விடயம் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் முடிவுக்கு வராமல் போனது.

தற்போது தமிழ்த் தரப்பில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் பிரதிநிதித்துவ  மாற்றங்கள்  எமது பேரம் பேசும் பலத்தை வெகுவாகப் பாதித்திருக்கின்றது. தெற்கில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் தீர்வுக்கான தெளிவான பாதையை திறக்கவில்லை.  அதனை வலியுறுத்த  எமது பலமும் போதாமல் இருந்தது.  

இன்று ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலை எமது அரசியல் தீர்வுக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி வருவதாகத் தோற்றம் தருகின்றது. பேச்சுக்கு நம் தரப்பு தயாராகின்ற போதிலும், இதைக் கையாளும் ஒருமித்த பொறிமுறை எம்மிடம் இல்லை. பேச்சுகள் தோல்வி காண்பதற்கான காரணங்களை அனுபவப் பாடங்களாகக் கொண்டு அவற்றை தவிர்க்க அல்லது எதிர்கொள்ள சரியான பொறிமுறையை நாம் ஏற்படுத்துவதே எம் இனத்துக்கு நலன் பயக்கும்.

தமிழ்த் தேசியப் பரப்பில் செயலாற்றி வரும் அனைத்துக் கட்சிகளும் எமது அரசியல் தீர்வு சம்பந்தமான ஒருமித்த நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. தீர்வின் இறுதி வடிவம், கட்டமைப்பு சமஷ்டி முறையில்தான் அமைய வேண்டும் என்பதை  எல்லோரும் மாறாத நிலைப்பாடாகக் கொண்டுள்ளோம். அதே நேரம் அதற்கான விடயங்களைக் கையாள எமது அரசியல் தீர்வுக்கான நிலையான பொறிமுறையுடன் கூடிய கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும்.

சர்வதேச, பிராந்திய, தென்னிலங்கை, மற்றும் தமிழர் தரப்பில் ஏற்படும் அரசியல், பிரதிநிதித்துவ மாற்றங்களால் இந்தப் பொறிமுறையின் செயற்பாடுகள் குழப்பம் அடைய மாட்டாது. மாறாக விட்ட இடத்தில் இருந்து பேச்சுவார்த்தைகளை தொடருவதற்கு வழி அமைக்கும்.

கடந்த காலங்களில், தெற்கிலுள்ள  அரசுகள் முன்மொழியும் அல்லது அழைக்கும் தற்காலிக கட்டமைப்புகளில் நாம் கலந்துகொள்வதாக அமைந்துள்ளதே தவிர  எமது இனத்தின் உறுதியான அரசியல் தீர்வுக்கான ஒரு பொறிமுறையை நாம் கொண்டிராமல் இருப்பது துரதிஷ்டவசமானது. இதை நாங்கள் இப்பொழுது தீர்க்க வேண்டிய அவசியம்  எழுந்துள்ளது.

கூட்டமைப்புகள்,  கூட்டணிகள், கட்சிகள், கட்சி நிலைப்பாடுகள், கொள்கைகள், தேர்தல் நோக்கங்கள் என்பவற்றைத் தாண்டி இந்தப் பொறிமுறையை வகுத்து, உருவாக்கி, செயற்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவது காலத்தின் தேவை.

எமது இனத்தின் அரசியல் தீர்வுக்கான பொறிமுறையை ஏற்படுத்தும் இந்த முயற்சிக்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளினதும், தரப்புகளினதும் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்” – என்றுள்ளது.

Leave a Reply